ஜல்லிக்கட்டு போட்டிகளில் விதிமீறல் இல்லை: உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கென்று தனிப்பட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. தற்போது நடத்தப்படும் போட்டிகளில் எந்த விதிமுறையும் மீறப்பட்டதாக தெரியவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.   தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகத்தில் கம்பாலா உள்ளிட்ட மிருகங்களை கொண்டு நடத்தப்படும் விளையாட்டுகளை அனுமதிக்கும் வகையில் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய விதிமுறைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் மூன்றாவது நாளாக நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்றும் விசாரணைக்கு வந்தது.

பீட்டா உட்பட மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஏற்கனவே இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் இந்த பழக்கத்தை காட்டுமிராண்டித்தனம் என அறிவித்து விட்டதால் அதனை மீண்டும் இந்த நீதிமன்றம் மாற்றக் கூடாது’ என வாதிட்டார். இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் ஜல்லிக்கட்டில் இருக்கும் நடைமுறைகளை தான் கொடூரம் என நீதிமன்றம் கூறியதே தவிர, ஜல்லிக்கட்டு விளையாட்டே கொடூரமானது என கூறவில்லை. மேலும் தற்போது ஜல்லிக்கட்டுக்கென சட்டம் உள்ளது. உரிய வழிமுறைகள் வகுக்கப்படுள்ளன.

எனவே அந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் தற்போது மனுதாரர் தரப்பு பல்வேறு விதிமீறல் அறிக்கைகளை சமர்ப்பிக்கிறீர்கள். இதனை எப்படி எடுத்துக்கொள்வது என்பது புரியவில்லை. இதில் விதிமுறைகளை அமல்படுத்துவதில் மட்டுமே தவறு ஏற்பட்டுள்ளது. மற்றபடி ஒன்றும் இல்லை என உச்ச நீதிமன்றம் நினைக்கிறது.  குறிப்பாக நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகிறது. அதை துன்புறுத்தலாக நாம் எடுத்துக் கொள்ள முடியுமா ?. போட்டிகளில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் கண்களில் மிளகாய் பொடி தூவுதல் போன்றவை தான் விலங்குகள் துன்புறுத்தலாக இருக்க முடியும். அதனை வேண்டுமானால் இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளாக காளைகளை வைத்து இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தனி பயிற்சி அளிப்பதோடு, அந்த காளைகளை தங்கள் சொந்த குடும்ப உறுப்பினராகவே பாவிக்கின்றனர். இருப்பினும் காளைகளுக்கு கொடுமை இழைக்கப்பட்டால் அதனை அனுமதிக்க முடியாது. ஆனால் தற்போது அவ்வாறான எந்த விதிமீறலும் நடைபெறுவதாக தெரியவில்லை. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு என்று தனிப்பட்ட முறையில் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளதால், அதனை கட்டாயம் அமல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விதிகளை அமல்படுத்த வேண்டும் என்பதே முக்கியம். அதனை விடுத்து நடைமுறையை மாற்ற வேண்டும் என்பது கிடையாது என தெரிவித்தனர். இதையடுத்து மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநில மனுதாரர்கள் வாதங்களை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை நான்காவது நாளாக இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.