Urvashi Rautela relationship: இந்திய அணியின் இளம் வீரராக இருக்கும் ரிஷப் பன்ட் வொயிட் பால் கிரிக்கெட்டில் ரன் எடுக்க திணறி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடும் அவரால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எதிர்பார்த்தளவுக்கு ரன்களை குவிக்க முடியவில்லை. கடந்த ஓராண்டாகவே பலமுறை அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டபோதும், இந்திய அணிக்காக எந்தவொரு பெரிய இன்னிங்ஸூம் அவரிம் இருந்து வரவில்லை. கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய தொடரிலும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து சொதப்பினார்.
இதனால் அவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அவருக்கு பதிலாக இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு போதுமான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர். அதிக வாய்ப்புகளை பெற்றும் விளையாடாத ரிஷப் பன்டை பிசிசிஐ தாங்கிப் பிடிப்பது ஏன் என கேள்வி எழும்பியுள்ள நிலையில், அவரின் முன்னாள் காதலியான ஊர்வசி ரவுடேலாவும் சீண்டியுள்ளார்.
இருவரும் நீண்ட நாட்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். பின்னர் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்பால் ஊர்வசி ரவுடேலாவை விட்டு ரிஷப் பன்ட் பிரிந்ததாக கூறப்படுகிறது. பேட்டி ஒன்றில் கூட, ரிஷப் பன்ட் தனக்காக பல மணி நேரம் காத்திருந்ததாகவும், ஆனால் அவரை நான் சந்திக்கவில்லை என தெரிவித்தார். இதற்கு ரிஷப் பன்ட் அண்மையில் பதிலடி கொடுத்தது இணையத்தில் பேசுபொருளான நிலையில், இப்போது மீண்டும் ரிஷப் பன்டை வம்புக்கு இழுத்துள்ளார் ஊர்வசி ரவுடேலா.
“எனக்கு ரிஷப் பன்டை யார் என்றே தெரியாது. அவரை எல்லோரும் ஆர்பி என அழைப்பதும் எனக்கு தெரியாது. நான் பாசமாக ஆர்பி என குறிப்பிடுவது என்னுடன் நடித்த சக நடிகரான ராம் பொதினேனி-ஐ தான். என்னைப் பற்றி சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள். அதனை மக்கள் நம்புவதற்கு முன்பு உண்மையை தெரிந்து கொள்ள முன்வரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.