ஆந்திராவில் வீடு வழங்குவதாக கூறி ரூ.900 கோடி மோசடி செய்த திருப்பதி கோயில் நிர்வாகி கைது

திருமலை: ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குவதாக கூறி 2,500 பேரை ஏமாற்றி ரூ.900 கோடி மோசடி செய்த திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு  உறுப்பினர் லட்சுமிநாராயணாவை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் புறநகர் பகுதியான அமீன்பூரில் ‘சாஹிதி ஷ்ரவனி எலைட்’ என்ற பெயரிலும், ‘சாகித்யா இன்ப்ராடெக் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரிலும் வீடுகள் கட்டி கொடுப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் லட்சுமிநாராயணா கவர்ச்சி விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி 2500 பேர் ரூ.900 கோடி முதலீடு செய்துள்ளனர். ரூ.900 கோடி வசூல் செய்த லட்சுமிநாராயணா யாருக்கும் வீடுகளை கட்டி கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், ஐதராபாத் மத்திய குற்றப்பிரிவில் கடந்த ஜூலை 31ம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து லட்சுமிநாராயணா வெளியிட்ட வீடியோவில், ‘யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அவசரப்பட வேண்டாம். பன்னாட்டு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும், ஓரிரு நாளில் முடிவுக்கு வரும். பதிவுகள் மற்றும் பணத்தை திரும்ப பெறுதல் ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் தொடங்கும்’ என்று  என வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால், யாருக்கும் பணம் தரவில்லை. இந்நிலையில், லட்சுமிநாராயணா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இருந்து லட்சுமிநாராயணா ராஜினாமா செய்துள்ளார்.

* 3 மணி நேரத்தில் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் 64 ஆயிரத்து 586 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை முதல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் அறைகள் எதுவும் பக்தர்களால் நிரம்பவில்லை. இதனால், பக்தர்கள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்தனர். ரூ.300 டிக்கெட் ெபற்ற பக்தர்கள் உடனடியாக தரிசனம் செய்தனர்.  

* 8 மாதங்களில் ரூ.1,161 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் 8 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். தொடர்ந்து, 9வது மாதமாக உண்டியல் வருவாய் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. நவம்பர் மாதத்தில் ரூ.127.30 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த 9 மாதங்களில் அதிக பட்சமாக ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.139.35 கோடி கிடைத்தது. இந்த ஆண்டில் கடந்த 8 மாதங்களில் மட்டும் ரூ.1,161.74 கோடி உண்டியல் மூலம் வருவாய் கிடைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.