இந்தியாவுக்கு ஜனநாயகத்தை யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை: ஐ.நா.வுக்கான இந்திய தூதர் காம்போஜ்

வாஷிங்டன்: ஐ.நா.வின் அதிகாரமிக்க அமைப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளது. இந்த கவுன்சிலில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. நிரந்தர உறுப்பினர்களாக 5 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியா உள்பட 10 நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன.

இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தலைமை பொறுப்பை ஏற்று செயல்படும். அந்த வகையில், டிசம்பர் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில், ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள ருசிரா காம்போஜ் ஐ.நா. தலைமையகத்தில் இந்த மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது, இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு, ஐ.நாவுக்கான முதல் இந்திய பெண் தூதரான காம்போஜ் கூறியது:

இந்தியா உலகிலேயே மிகவும் பழைமையான நாகரீகத்தை கொண்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்தியாவின் ஜனநாயகம் என்பது 2,500 ஆண்டுகளுக்கு முன்பான வேர்களைக் கொண்டது. எனவே, நாங்கள் எப்போதும் ஜனநாயகத்தை மதித்து நடப்பவர்கள்தான். அந்த வகையில், சட்டமன்றம், நிர்வாகம், நீதி துறைக்கு அடுத்தபடியாக நான்காவது தூணாக பத்திரிகைக்கு இடமளித்து அதற்கான சுதந்திரத்தை பாதுகாத்து வருகிறோம். தற்போதைய நிலையில், சமூக ஊடகங்களும் துடிப்பாக செயல்பட்டு வருகின்றன. எனவே, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்ட நாடாக இந்தியா இன்றளவும் மதிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறையும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக பயிற்சியை (பொதுத் தேர்தல்) நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அப்போது, ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி சுதந்திரமாக தேர்வு செய்யப்பட்டவர்களால்தான் இந்தியா இயங்கி வருகிறது. அதிலும், வேகமான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை உலக நாடுகளே கூறி வருகின்றன.

எனவே, ஜனநாயகத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த பாடத்தை இந்தியாவுக்கு யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.