கிரிக்கெட்டில் பார்மை இழக்காத வீரர் என்று யாருமே கிடையாது – ரவி சாஸ்திரி

வங்காளதேசம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை டிசம்பர் டாக்கா நகரில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

அதே வேளையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நெருங்கி வரும் வேளையில் அதற்கு தயாராகும் வகையில் இந்த சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டி20 உலக கோப்பையின் போது பார்முக்கு திரும்பிய விராட் கோலி இந்த தொடரிலும் அவரது சிறப்பான பார்மை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல டி20 உலக கோப்பை தொடரில் சொதப்பிய ரோகித் சர்மா இழந்த தனது பார்மை மீட்டெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது தற்போதைய பார்ம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியதாவது:-

எந்த ஒரு வீரரும் தங்களது பார்மை இழப்பது என்பது நடக்கக் கூடிய ஒன்றுதான். பார்மை இழக்காத வீரர் என்று கிரிக்கெட்டில் யாருமே கிடையாது. அனைவருக்குமே இது நடந்துள்ளது. கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், தோனி போன்றவர்கள் கூட பார்மை இழந்து தவித்த காலம் எல்லாம் உண்டு.

ஒரு வீரரால் எப்பொழுதுமே அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய இயலாது, அது மனித இயல்பு தான். அவர்களும் ஒரு கட்டத்தில் பார்மில் சறுக்களை சந்தித்து இருந்தார்கள். அதேபோலத்தான் விராட் கோலி மற்றும் ரோஹித்துக்கு பார்மில் சறுக்கல் ஏற்பட்டது.

ஆனாலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற பெரிய வீரர்களுக்கு இழந்த பார்மை மீட்டெடுக்க ஒரு சிறிய இடைவெளியும், ஒரு முழுவதுமான தொடருமே போதுமானது.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.