கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷண் விருது!

சான்பிரான்சிஸ்கோ,

இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது.

குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டன.விருது பட்டியலில் இருந்தவர்களுக்கு சமீபத்தில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் சுந்தர் பிச்சைக்கு விருது வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பத்ம பூஷண் விருதை சுந்தர் பிச்சை பெற்று கொண்டார். இந்தியா சார்பில் சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து வழங்கினார்.மதுரையில் பிறந்தவரான சுந்தர் பிச்சை, காரக்பூரில் உள்ள ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றவர்.

இது தொடர்பாக சுந்தர் பிச்சை கூறியதாவது, “இந்த உயரிய கவுரவத்தை அளித்த இந்திய அரசு மற்றும் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துக்கு நன்றி. எனது குடும்பத்தினர் இருக்கும் இந்த வேளையில் பத்ம பூஷண் விருது பெறுவது பெரிய கவுரமாக உள்ளது. விருது வழங்கிய இந்திய மக்களுக்கும், அரசுக்கும் நன்றி.

என்னை செதுக்கிய வடிவமைத்த நாட்டில் இருந்து இந்த கவுரவம் வந்துள்ளது மகிழ்ச்சி. இந்தியா என்னுடன் எப்போதுமே இருக்கும். எங்கே போனாலும் இந்தியாவை என்னுடன் கொண்டு செல்வேன். நான் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி என்னை வியக்க வைக்கிறது.

கூகுள் மற்றும் இந்தியா கூட்டுறவை தொடர்ந்து வளர்க்க நான் ஆவலுடன் உள்ளேன். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் வளர்ச்சிக்கான உந்துசக்தியாகும். எனவே, வருங்காலத்தில் மாற்றத்தை கொண்டு வர இந்தியாவில் கூகுள் முதலீடு செய்ய தயாராக உள்ளது” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.