குஜராத், இமாச்சல் சட்டமன்றத் தேர்தல்: யாருக்கு வெற்றி? வெளியான எக்ஸிட் போல்!

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதியுடனும், குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியுடனும் நிறைவடைகின்றன. பதவிக்காலம் முடிவடைவதற்கு அதிகபட்சம் 6 மாதகால அவகாசம் இருக்கும் நிலையில், அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதி.

இதனிடையே, மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு மாநிலங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் 75.57 சதவீத வாக்குகள் அம்மாநிலத்தில் பதிவாகியிருந்தன என்பது கவனிக்கத்தக்கது. இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல், தெற்கு குஜராத், சவுராஷ்ட்ரா தொகுதிகளை உள்ளடக்கிய 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 1ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. அதில், 63.31 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, குஜராத் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி குஜராத் மாநில இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 58.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 92 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும்.

குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலத் தேர்தல் முடிவுற்றுள்ள நிலையில், இந்த இரு மாநில தேர்தல்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கணித்துள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் ஏற்கனவே பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், மீண்டும் பாஜகவே ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன.

குஜராத், இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே இரு முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கி பெரும் சவாலாக இருந்தது. இதனால், இரு மாநிலங்களிலும் மும்முனை போட்டி நிலவிய நிலையில், இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன.

P-MARQ கருத்துக்கணிப்புப்படி, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 34-39 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் கட்சி 28-33 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், ஆம் ஆத்மி 0-1 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், இதர கட்சிகள் 1-4 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Jan Ki Baat கருத்துக்கணிப்புப்படி, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 32-40 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் கட்சி 27-34 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், ஆம் ஆத்மி 0, இதர கட்சிகள் 1-2 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

TimesNow-ETG கருத்துக்கணிப்பானது, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 38 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், ஆம் ஆத்மி 0, இதர கட்சிகள் 1 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கணித்துள்ளது.

இதேபோல், P-MARQ கருத்துக்கணிப்புப்படி, குஜராத் மாநிலத்தில் 128-148 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் கட்சி 30-42 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், ஆம் ஆத்மி 2-10 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், இதர கட்சிகள் 0-3 வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Jan Ki Baat கருத்துக்கணிப்புப்படி, குஜராத் மாநிலத்தில் 117-140தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் கட்சி 34-51 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், ஆம் ஆத்மி 6-13 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், இதர கட்சிகள் 1-2 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் இரு மாநிலங்களிலும் பாஜகவே வெற்றி பெறும் என கணித்துள்ளன. இரண்டாம் இடத்தை காங்கிரஸ் கட்சியும், மூன்றாம் இடத்தை ஆம் ஆத்மி கட்சியும் நிரப்பும் எனவும் அந்த கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.