சீனாவுக்கு எதிராக போராட்டம்; இலங்கை எம்.பி., அறிவிப்பு| Dinamalar

கொழும்பு : இலங்கையை கடன் பொறியில் சிக்க வைக்கும் சீனாவை வெளியேற்றும் போராட்டத்தை துவங்கப் போவதாக, அந்த நாட்டு எம்.பி., ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பல இடங்களில் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட வர்த்தகம் பாதிக்கப்பட்டு நிதி நெருக்கடி நிலவுவதால், இலங்கை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இலங்கைக்கு அதிக அளவில் கடன் கொடுத்து, பொருளாதார நெருக்கடியில் சிக்க வைத்ததாக, பலரும் சீன அரசு மீது குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்தவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.,யுமான ராசமாணிக்கம், அந்த நாட்டு பார்லிமென்டில் பேசியுள்ளதாவது:

சீனா, இலங்கையின் நட்பு நாடு அல்ல. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் நட்பு நாடு. இலங்கைக்கு உதவுவது போல் சீன ஆட்சியாளர்கள் நடிக்கின்றனர். உண்மையாகவே உதவ விரும்பினால், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு சீனா ஆதரவளிக்க வேண்டும். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இலங்கையை கடன் பொறியில் சிக்க வைக்க சீனா முயற்சிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அவரது பேச்சுக்கு இலங்கையில் உள்ள சீன துாதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, சீனாவுக்கு எதிராக, ‘சீனாவே வெளியேறு’ என்ற போராட்டத்தை விரைவில் இலங்கையில் துவங்கப் போவதாக ராசமாணிக்கம் அறிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.