‘தாஜ்மஹாலை ஷாஜஹான்தான் கட்டினாரா?’ – உச்ச நீதிமன்றம் வந்த வினோத வழக்கும் நீதிபதிகளின் கொந்தளிப்பும்

புதுடெல்லி: தாஜ்மஹாலை ஷாஜஹான்தான் கட்டினாரா என்பதை உறுதிப்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கட்டிடம் தாஜ்மஹால். 42 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த கட்டிடம் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், காதலின் சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது. முகலாய மன்னரான ஹாஜஹான், இறந்துபோன தனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மஹாலை கட்டியதாகத்தான் நாம் படித்து வந்தோம்; வருகிறோம். ஆனால், இதைக் கேள்விக்குள்ளாக்கி வழக்கு தொடுத்திருக்கிறார் ஹரியாணாவைச் சேர்ந்த சுர்ஜித் யாதவ்.

உச்ச நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “17-ம் நூற்றாண்டில் ஷாஜஹான் தாஜ்மஹாலை கட்டியதாக நாம் பள்ளி பாட புத்தகங்களில் கற்பிக்கிறோம். ஆனால், நாம் கற்பிப்பது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். ஷாஜஹான் தாஜ்மஹாலை கட்டுவதற்கு முன், அங்கு அதுபோன்ற கட்டிடம் இருந்ததா இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அந்தக் கட்டிடத்தின் உண்மையான வயதையும், உண்மையான வரலாற்றையும் உறுதிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிகுமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “அனைத்திற்கும் நீதிமன்றத்தை இழுக்காதீர்கள். 400 வருடங்களுக்கு முந்தைய அந்தக் கட்டிடத்தின் உண்மையான வயதையும் வரலாற்றையும் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்த முடியுமா? நீங்கள் உங்கள் மனுவில், தவறான தகவல்களை களையுங்கள் என குறிப்பிட்டிருக்கிறீர்கள். எது உண்மையான தகவல் என்பதை யார் உறுதிப்படுத்துவது? யார் தீர்மானிப்பது? இதுதான் நீதிமன்றத்தின் வேலையா?” என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.

இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் கருத்தை ஏற்பதாகவும், மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், மனுதாரர் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை அணுகுவார் என்றும் அவர் கூறினார். இதையடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.