பெண்களின் தொடர் போராட்டம் எதிரொலி: ஈரானில் ஹிஜாப் கண்காணிப்பு பிரிவு கலைப்பு

டெஹ்ரான்: ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது.

ஈரானில் இஸ்லாமிய மதச் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வீட்டைவிட்டு வெளியில் செல்லும் 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம்.

இதற்கிடையே, ஹிஜாப் மத உடைக் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க 2006-ல் அறநெறிக் காவல் பிரிவை ஈரான் அரசு தொடங்கியது. ரோந்துப் பணியில் ஈடுபடும் இந்தப் பிரிவுக்கு, உடை கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கைது செய்யும் அதிகாரமும் இருந்தது.

இளம்பெண் உயிரிழப்பு

இந்நிலையில், டெஹ்ரானில் பொது இடத்தில் சரியாக ஹிஜாப்அணியவில்லை என்று கூறி, மாஸா அமினி(22) என்ற இளம்பெண்ணை அறநெறி போலீஸார் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி கைது செய்தனர்.

காவலில் இருந்த அவரை போலீஸார் அடித்து, துன்புறுத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் 16-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் ஹிஜாப் அணியமறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாபுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே, போராட்டத்தை ஒடுக்க போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர், தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதில், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஹிஜாப் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பது குறித்து நாடாளுமன்றமும், நீதித் துறையும் ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் ஜாபர் மான்டசெரி நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், அறநெறி காவல் துறையை ஈரான் அரசு ரத்து செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஈரான் அட்டார்னி ஜெனரல் ஜாபர் மான்டசெரி நேற்றுகூறும்போது, “அறநெறி காவல் துறைக்கும், நீதித் துறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அந்தப்பிரிவு இப்போது கலைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.