6வது நினைவுநாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதர்வாளர்களுடன் ஊர்வலமாலக சென்று  மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி,  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று நினைவிடத்தில்  மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் , கேபி முனுசாமி, கோகுல இந்திரா, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், பி.கே.எம்.சின்னையா, ஓஎஸ் மணியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் அனைவரும் அங்கு உறுதிமொழி ஏற்றனர். அப்போது,

மக்களை ஏமாற்ற விடமாட்டோம். பொம்மை முதலமைச்சரே உங்கள் போலி முகத்தை வெளி கட்டுவோம். குடும்ப ஆட்சியின் கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பவும் என்று சபதம் இருக்கிறோம்.

அம்மாவின் ஆட்சியில் சிறப்பான திட்டங்கள் பல உண்டு. ஏழைகள் பசியாற அம்மா உணவகங்கள், அம்மா மருந்தகம், மாணவர்கள் வளம் பெற மடிக்கணினி, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இருசக்கர வாகனம் இத்தகைய அற்புதமான திட்டங்களை முடக்கி போட்ட தீய சக்தி ஆட்சியே, அம்மாவின் புகழை மறைக்காதே.

இந்திய சரித்திர வானில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக கழகத்தை மாற்றியவர் நம் ஜெயலலிதா. வருகிற நாடாளுமன்ற பொது தேர்தலில் வெற்றி கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட சூளுரைப்போம். நாற்பதும் நமதே.. நாளையும் நமதே.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.. வெற்றி முழக்கம் என்றே திக்கெட்டும் வெற்றியை படைத்திடுவோம். தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம்… புரட்சித்தலைவரின் பெரும் புகழையும் புரட்சித்தலைவியின் பெரும் புகழையும் எந்நாளும் போற்றிடுவோம்.

பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மௌனம் கடைபிடிக்கப்பட்டது.

நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் அதிமுக தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர். கட்சியினர் மட்டும் இன்றி பொதுமக்கள் பலரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.