தமிழ்நாட்டை புயல் தாக்க வாய்ப்பு உள்ளதால் டிசம்பர் 8, 9 தேதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் டிசம்பர் 8, 9 தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிக்கை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, 6-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், 7ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

8-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக் கூடும். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

9-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். 10ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். இதன் காரணமாக 8 மற்றும் 9ம் தேதி தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் அனுப்பிவைப்பு: வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான படகு உள்ளிட்ட உபகரணங்கள், இடிந்துபோன கட்டடங்களுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்கான உபகரணங்கள், மீட்புப் பணிக்கான தொலைத் தொடர்பு உபகரணங்கள், தற்காப்பு உபகரணங்கள் என அனைத்து வகையான மீட்புப் பணி உபகரணங்களுடன் இந்த குழுக்கள் தயார் நிலையில் இருக்கும் என தெரிவித்துள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள், அரக்கோணத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்தவாறு நிலைமையை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

‘மேன்டூஸ்’ புயல்: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் பட்சத்தில், அதற்கு ‘மேன்டூஸ்’ என்று ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் பெயரிடப்படும். அதிகனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.