விஜய் நடிப்பில் வம்சி இயக்கியுள்ள படம் தான் வாரிசு. தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். பொங்கலுக்கு படம் வெளியாவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் எழுந்தன. அதையெல்லாம் ஒரு வழியாக முடித்து விட்டு நிம்மதியாக விஜய்க்கான tribute வீடியோ போல தீ தளபதி பாடலை தமன் இசையில் சிம்பு பாட படக்குழு வெளியிட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே வெளியான இந்தப்பாடலில் எதிர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றிருந்தன. ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த வரிகள் இப்போது விஸ்வரூபமாக பல பிரச்சனைகளை இழுந்து வருகின்றன. திமுகவினர், அஜித் ரசிகர்கள் இந்த வரிகளால் கொந்தளித்து வருகின்றனர்.
முதலில் அஜித் ரசிகர்களுக்கு இந்தப்பாடலால் என்ன பிரச்சனை என்பதை காணலாம். சிம்பு ஒரு தீவிர அஜித் ரசிகர். இது சினிமா வட்டாரத்தில் நன்றாக தெரியும். தனது படங்களில் அஜித் போஸ்டர், அல்லது அஜித் குறித்து ஒரு வசனத்தையாவது வைத்து விடுவார். மன்மதன் படத்தில் கூட தான் எந்த அளவுக்கு தீவிர அஜித் வெறியர் என்பதை உணர்த்துவது போல காட்சியை அமைத்திருப்பார். இந்த சூழலில் அவர் விஜய்க்காக பாடிய தீ தளபதி பாடல் அஜித் ரசிகர்களை கோபமடைய செய்துவிட்டது. அதிலும், அவமானம் ஒன்னு கிடைச்சா அதில் கிரீடம் ஒன்னு உருவாக்கு என்று இடம்பெற்ற வரிகளை பார்த்த அஜித் ரசிகர்கள், கடுப்பாகி விட்டனர். காரணம் கிரீடம் என்பது அஜித் நடித்த ஒரு படத்தின் பெயர். இதனால் வேண்டுமென்றே அஜித்தை வம்பிழுத்து இந்த வரிகள் உருவாக்கப்பட்டதாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்க, சிம்பு அஜித் ரசிகர் என்று கூறியது அவரது படங்கள் ஓட வேண்டும் என்ற சுயநலத்திற்காக தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதோடு இனி சிம்பு அஜித் ரசிகர் என்று கூறக்கூடாது எனவும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை போதாதென்று இதே வரிகளை வைத்து திமுகவினர் சிலர் கடுப்பாகியுள்ளனர். அரசியலில் நுழையும் எண்ணத்துடன் இருக்கும் விஜய், கிரீடத்தின் மீது, அதாவது முதல்வர் பதவி மீது ஆசைப்படுவதாகவும், ஆனால் அதற்கு அவமானத்தை மட்டும் சந்தித்தால் போதாது, மக்களையும் சந்தித்து அவர்களுக்காக உழைக்க வேண்டும் எனவும் திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பொதுவாக கட்சியினர் தளபது என்று தான் அழைப்பார்கள். இதனால் தீ தளபதி பாடலில், விஜய் தளபதி என ஸ்டாலினுக்கு பதில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயல்வதாகவும் பேசப்படுகிறது.
இந்த பிரச்சனைகள் கொழுந்து விட்டு தீயாய் எரியும் நிலையில், இது போதாதென்று இந்தப் பாடல் வேறொரு பாடலின் காப்பி எனவும் விமர்சனம் எழுந்துள்ளது. அனிருத் இசையில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற வரவா வரவா பாடலைப் போலவே அச்சு அசல் இந்த பாடம் உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஒரு முறை வரவா வரவா பாடலையும், தீ தளபதி பாடலையும் அடுத்தடுத்து கேட்டால் ஒரே போல தான் இருக்கிறது. அதற்காக அது இந்தப்படத்தின் காப்பி என்று கூறுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். எப்படியோ சுமாரான பாடலைக் கூட இப்படி எதாவது கிளப்பிவிட்டு சூப்பர் ஹிட் ஆக்கும் மார்க்கெட்டிங் யுக்தி இந்த பாடலுக்கு ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பார்க்கலாம்.