BAN v IND: காயத்துடன் கடைசி வரை போராடிய ரோஹித்; ஆனாலும் வீழ்ந்த இந்தியா; தொடரை வென்ற வங்கதேசம்!

யார் அதிக திரில்லர்களை கொடுக்கிறார்கள் என்று அருள்நிதிக்கும் இந்திய வங்கதேச அணிகள் ஆடும் போட்டிகளுக்கும் போட்டி வைத்தோம் என்றால் நிச்சயம் இந்திய – வங்கதேச போட்டிகள்தான் வெற்றி பெறும்.

கடந்த போட்டி கொடுத்த திரில் அனுபவம் குறைவதற்குள் மற்றொரு திரில்லரை இந்த இரண்டு அணிகளும் இணைந்து பார்வையாளர்களுக்குக் கொடுத்துள்ளன. மெஹடி ஹாசனின் சதம், ரோஹித்தின் அரைசதம் எனக் கடந்த போட்டிகளை விட அதிக விறுவிறுப்புகளை இந்த இரண்டாவது ஒருநாள் போட்டி வழங்கியுள்ளது.

Umran Malik

ஆறு பௌலர்கள் என்ற மந்திரத்தை இந்த முறையும் இந்திய அணி விடவில்லை. கடந்த போட்டியில் சரியாக ஆடாத ஷபாஷ் அஹமதை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக அக்சர் அணிக்குள் வந்தார். குல்திப் சென்னுக்குப் பதிலாக உம்ரான் மாலிக். வங்கதேச அணியில் நசும் என்ற பந்துவீச்சாளர் மட்டும் புதிதாக அணிக்குள் வந்திருந்தார். டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பந்து வீசியபோதும் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே ரோஹித் வெளியேறினார். முகமது சிராஜ் பந்துவீச்சில் கிடைத்த கேட்ச்சைப் பிடிக்க நினைத்த ரோஹித் கையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாகக் களத்தை விட்டு வெளியேறினார். கேட்ச் வாய்ப்பு பறி போனாலும் மனம் தளராத சிராஜ் அடுத்த பந்தியிலேயே lbw முறையில் விக்கெட் எடுத்து இந்திய அணியின் விக்கெட் கணக்கைத் தொடங்கினார்.

அந்த அணியின் அதிரடி துவக்க வீரர் லிட்டன் தாஸின் விக்கெட்டையும் சிராஜ் வீழ்த்தினார். முதல் 10 ஓவருக்குள்ளேயே இரண்டு விக்கெட்டுகளை இந்திய அணி வீழ்த்தியதால் மிகப்பெரிய அடித்தளம் ஒன்று கிடைத்தது. அதைப் பயன்படுத்திய ஜம்மு காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக், தனது அதிவேக பந்துவீச்சு மூலம் ஷாண்டோவை போல்டாக்கினார்.

உம்ரானின் வேகமும் ஸ்டம்ப் தகர்ந்து பறந்த விதமும் அத்தனை இந்திய ரசிகர்களையும் பரவசப்படுத்தியது.

Mehidi Hasan

சிறிது நேரத்திற்குள்ளே தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த வங்கதேசம் 69 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இனி எளிதாக நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடுவர் என்று இருந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்க வந்தார் கடந்த ஆட்டத்தின் ஹீரோ மெஹடி ஹாசன். அனுபவ வீரர் மகமதுல்லா உடன் இணைந்து மெல்ல மெல்ல அணியின் ஸ்கோரை உயர்த்திக் கொண்டே சென்றார். அவ்வப்போது தேவையான பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்து 56 பந்துகளில் அரைசதம் கடந்தார் மெஹடி.

மஹமதுல்லாவும் 77 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். நாற்பதாவது ஓவர் வரை ஓரளவு நன்கு பந்து வீசிக் கொண்டிருந்த இந்திய அணி அதன் பிறகு மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. உம்ரான், சிராஜ், தாகூர் என அனைவருமே மோசமாக விளையாட அதை நன்கு பயன்படுத்திக் கொண்டது வங்கதேசம். தீபக் சஹார் காயம் காரணமாக வெறும் 3 ஓவர்கள்தான் வீசினார்.

இதையெல்லாம் பயன்படுத்தி 83 பந்துகளில் தன்னுடைய முதல் ஒரு நாள் சதத்தைப் பதிவு செய்தார் மெஹடி.

நசும் அஹமத் கடைசி நேரத்தில் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க வங்கதேசம் 50 ஓவர்களில் 271 ரன்கள் எடுத்தது.

ஏற்கெனவே ரோஹித்தை காயம் காரணமாக இழந்த இந்திய அணி 272 என்ற சிக்கலான இலக்கை துரத்தியது. சற்று வித்தியாசமாக தவான் உடன் இணைந்து கோலி தொடக்க வீரராகக் களம் கண்டார். ஆனால் மீண்டுமொரு முறை வேகமாகவே வெளியேறினார் கோலி. கூடவே தவான், சுந்தர், ராகுல் என வரிசையாக வெளியேற வங்கதேச அணியின் கை விரைவாக ஓங்கியது. அதன் பின்பு ஸ்ரேயாஸ் மற்றும் அக்ஸர் இணைந்து சிறிது நேரம் தாக்குப் பிடித்தனர். ஸ்ரேயாஸ் எதிரணியின் பந்துவீச்சை மிக எளிமையாகவே சமாளித்தார். அஷரும் அவ்வப்போது பவுண்டரிகளை அடிக்க இந்திய ரசிகர்கள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

Rohit Sharma

ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மெஹடி ஹாசன் பந்தில் ஸ்ரேயாஸ் கேட்ச் கொடுத்து வெளியேறக் கூடவே அடிக்க நினைத்து அக்ஸரும் வெளியேறினார். ஷர்துல் தாகூர், தீபக் சஹார் இருவருக்கும் வங்கதேச அணி பந்துவீச்சைச் சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. குறைவான ரன்கள் எடுக்கவே இருவரும் இணைந்து அதிகமான பந்துகளை எடுத்துக் கொண்டனர். அதிக பந்துகளை எடுத்துக் கொண்டும் தாகூர் கணிசமான ரன்கள் கூட சேர்க்காமல் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி அப்போதே தோற்றுவிட்டது என்று பலரும் நினைத்த நிலையில் விக்ரம் பட இடைவேளை போல `நாயகன் மீண்டும் வரார்’ எனக் களத்திற்குள் வந்தார் இந்திய கேப்டன் ரோஹித்.

கையில் காயம் இருந்த போதும் மிகச் சிறப்பாக விளையாடினார். பவுண்டரிகள், சிக்ஸர்கள் என தனக்கே உரிய முறையில் அதிரடியாக விளையாட இந்திய அணிக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது. ஆனால் ஆட்டத்தின் 48வது ஓவரில் சிராஜால் ரன் எதுவும் எடுக்க முடியாமல் போக ஆட்டம் வங்கதேசத்தின் கைக்குச் சென்றது. இருந்தாலும் கடைசி வரை போராடிய ரோஹித் கடைசி பந்து வரை இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவை என்று இருந்தபோது ரோஹித்தால் சிக்ஸர் அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி இந்தத் தொடரையும் 2-0 என இழந்திருக்கிறது.

Bangladesh

இந்திய அணி இந்தப் போட்டியில் மிக சுமாரான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தாலும் அர்ஷ்தீப், பும்ரா, ஷமி, சஹால், ஜடேஜா, ஹர்திக் போன்ற எந்த ஒரு முன்னணி பந்துவீச்சாளரும் இல்லை என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியின் முதுகெலும்பாக இருந்து வந்த டாப் ஆர்டர் பேட்டிங் கடந்த இரண்டு போட்டியாகவே ஆட்டம் கண்டுள்ளது.

குறிப்பாகக் கடந்த மூன்று வருடங்களாக ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் இணைந்து விளையாடிய போட்டிகளில் இந்த மூவரிடம் இருந்தும் ஒரே ஒரு சதம் மட்டும்தான் வந்துள்ளது. உலகக்கோப்பையை வைத்துக்கொண்டு இந்திய அணி இதே டாப் ஆர்டருடன் தொடருமா, இல்லை டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து ஜேசன் ராயைத் தூக்கிவிட்டு ஹேல்சைக் கொண்டு வந்தது போல இங்கும் எதுவும் மாற்றம் வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.