நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகளுடன் நெல்லையில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 12ம் தேதி சீராய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் தணிக்கை அதிகாரிகள் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 மாதம் நடத்திய ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் சார் பதிவாளர்கள் பலர் மீது மோசடி பத்திரப்பதிவு, அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகளை பதிவு செய்து வழங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் மூர்த்தி விசாரணை நடத்தினார். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சார் பதிவாளர்கள், அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகளை முறைகேடாக பதிவு செய்தது தெரியவந்தது. இதேபோல தூத்துக்குடி மாவட்டத்திலும் ஒரு சார் பதிவாளர் முறைகேட்டில் சிக்கியுள்ளார். இதையடுத்து மூவரையும் பதிவுத் துறை தலைவர் சிவன் அருள் உத்தரவுப்படி நெல்லை டிஐஜி (பொறுப்பு) ராஜ்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
