ஜெய்ப்பூர்: இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் 100-வது நாளை முன்னிட்டு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட்டும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: “எனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக திட்டமிட்ட ரீதியில் அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் காணாமல் போய்விட்டதாக பாஜக பொய் பிரச்சாரம் செய்கிறது. கொள்கை ரீதியாக இயங்கக் கூடிய கட்சி காங்கிரஸ். அது எப்போதும் தனது கொள்கையில் உறுதியாக இருக்கும். நான் சொல்வதை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் கட்சியால் பாஜக வீழ்த்தப்படும்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்சினை குறித்து கேட்கிறீர்கள். இதுபோன்ற நிகழ்வுகள் சிலநேரங்களில் ஏற்பட்டு விடுகின்றன. ஆனால், கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை; எந்த பிரச்சினையும் இல்லை.
இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது. ஆனால், இதனை நமது அரசு ஏற்க மறுக்கிறது. இந்த உண்மையை அரசு மறைத்து வருகிறது” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.