சிறுதானிய கொள்முதல் அறிவிப்பு வேளாண் பட்ஜெட்டில் வெளியாகும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்..!

தஞ்சாவூர்: நடப்பாண்டிற்கான சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக 4 மாவட்ட விவசாய பிரதிநிதியுடன் உழவர்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் உணவு மற்றும் உணவு வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஆலோசனை கூட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி தலைவர்கள், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் சம்பா கொள்முதல் குறித்து விவசாயிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நடப்பாண்டு சம்பா கொள்முதல் குறித்து முன்கூட்டியே விவசாயிகளில் கருத்தறிந்து நடவடிக்கைகள் எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டதை அடுத்து முத்தரப்புக்கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார். சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க சிறுதானியங்கள் கொள்முதல் குறித்து வர உள்ள வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும், முதல் கட்டமாக தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் கேழ்வரகு விநியோகம் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.