கமுதி: கமுதி அருகே குண்டும் குழியுமான சாலையில் மழைநிர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிகுள்ளாகி வருகின்றனர். கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு வரும் சாலை கடந்த 10 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் குடியிருப்புகளின் நடுவே செல்லும் இந்த சாலையில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
மேலும் சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த தண்ணீரால் ெகாசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவும் சூழ்நிலை நிலவுகிறது.
மேலும் இப்பகுதியில் இருந்து பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் இந்த சாலையை தினந்தோறும் கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதியில் உடனடியாக சாலைவசதி அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.