புதுடெல்லி: மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரை ‘கிராமத்து பெண்’ என அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமர்சித்தபோது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்ததை பாஜக தற்போது நினைவுபடுத்தியுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் உதவுவதாகவும், ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததை மறக்க முடியாது’’ எனவும் கூறினார். இதையடுத்து, ஐநா பாதுகாப்பு சபைக்கு வெளியே பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி, பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் கலவரத்தோடு தொடர்புபடுத்தி கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு இந்தியாவில் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உட்பட கட்சித் தலைவர்கள் மவுனமாக உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை, ‘கிராமத்து பெண்’ என அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமர்சித்ததற்கு, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கட்சி சார்பற்று கடும் கண்டனம் தெரிவித்ததை பாஜக நினைவுபடுத்தியுள்ளது.
ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘‘125 கோடி மக்களை கொண்டுள்ள ஒரு வலுவான நாட்டின் பிரதமரை நீங்கள் எப்படி கிராமத்து பெண் என கூற முடியும். இந்திய பிரதமருக்கு இதைவிட பெரிய அவமானம் எதுவும் இருக்கமுடியாது. கொள்கை ரீதியாக நாங்கள் அவரை எதிர்த்தாலும், பிரதமருக்கு ஏற்பட்ட அவமானத்தை நாடு பொறுத்துக்கொள்ளாது’’ என்று நவாஸ் ஷெரீப்பின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பாஜக தொண்டர்கள், ‘பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் அமைச்சருக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்’’ என கேள்வி எழுப்பியுள்ளனர்.