
என் காதல் எல்லாம் கணவர் தான்: நயன்தாரா நெகிழ்ச்சி
பொதுவாக நயன்தாரா அவர் நடிக்கும் படங்களின் எந்த விதமான புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வர மாட்டார். எவ்வளவு பெரிய ஹீரோ ஜோடியாக நடித்தாலும் அப்படங்களுக்காக ஒப்பந்தம் போடும் போதே எந்த நிகழ்ச்சிக்கும் வர மாட்டேன் என குறிப்பிட்டுவிடுவார் என்று திரையுலகத்தில் சொல்வார்கள்.
இந்நிலையில் 'கனெக்ட்' படத்தின் சிறப்புக் காட்சிகளை சமீபத்தில் சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் இரண்டு காட்சிகளாக நடத்தினார்கள். முதல் காட்சி பத்திரிகையாளர்களுக்காகவும், இரண்டாவது காட்சி படக் குழுவினர், சினிமா பிரபலங்களுக்காகவும் நடத்தினார்கள். அவற்றில் நயன்தாரா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பின்னர் நடந்த புரமோஷன் நேர்காணலில் நயன்தாராவிடம் காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'என்னுடைய காதலெல்லாம் என் கணவர்தான். எப்போது நாங்கள் காதலிக்கத் துவங்கினோமோ அப்போதிலிருந்து காதலுக்கான அர்த்தமாக அவர் இருக்கிறார். அவருடன் இருக்கும்போது எனக்கு எந்தக் கவலையும் இல்லை' என விக்னேஷ் சிவன் குறித்து நெகிழ்ச்சியாக பதிலளித்துள்ளார்.