“எந்தவொரு கட்சியையும் மதவாத கட்சியாக இயங்க அனுமதிக்க கூடாது!" – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இந்திய வரலாற்றுப் பேவையின் 81-வது மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “1935-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த வரலாற்று அமைப்பானது 87 ஆண்டுகளைக் கடந்து வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறது. எந்த அமைப்பாக இருந்தாலும் அதனை உருவாக்குவது எளிது, ஆனால் தொடர்ந்து நடத்துவதுதான் கடினம். `தத்துவஞானிகள் இதுவரை உலகத்தைப் பற்றி பல்வேறு முறைகளில் விளக்கம் சொல்லிவந்தார்கள். ஆனால் நாம் எப்படி அதை மாற்றி அமைப்பது என்று நினைப்பவர்கள்’ என்றார் கார்ல் மார்க்ஸ்.

முதல்வர் ஸ்டாலின்

நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக வரலாற்றைப் படித்தாக வேண்டும். கடந்தகால வரலாற்றைப் படிப்பவர்களால் மட்டும்தான் நிகழ்கால வரலாற்றைப் படைக்க முடியும், எதிர்காலத்தை கணிக்க முடியும். அப்படி படிக்கப்படக்கூடிய வரலாறு, அறிவியல்பூர்வமான உண்மையான வகையில் அமைந்திட வேண்டும். கற்பனை கதைகளை சிலர் வரலாறுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்று நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்று திரிபுதான். 1994-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை நான் இங்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மை. அதை எந்த வகையிலும் மீறுவதை அனுமதிக்க முடியாது. எந்தவொரு கட்சியையும் மதவாத கட்சியாக இயங்க அனுமதிக்கக் கூடாது.

முதல்வர் ஸ்டாலின்

பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்களிடையே பிளவை உண்டாக்கி அவர்களுக்குள்ளே படுகொலையை தூண்டுகிற சக்தியை இயங்க அனுமதித்தால் ஜனநாயகமே இல்லாமல் போய்விடும். ஒரு மதச்சார்பற்ற அரசு அந்த சக்திகளை கட்டுப்படுத்தி முந்தைய சமுதாயத்தை இன்றைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். இந்தியாவின் நிலப்பரப்பு ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. இடையில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டதே வேற்றுமைகள். இந்த வேற்றுமைகளை, ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் பொய் வரலாறுகளைப் புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். தமிழ்நாடு தொன்மையான வரலாறு கொண்ட நிலப்பரப்பு. நாங்கள் பழம்பெருமை மீது பற்று கொண்டவர்கள்தான், ஆனால் பழைமைவதிகள் அல்ல. அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில்தான் எங்கள் வரலாற்று பெருமைகளைப் பேசுகிறோம்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.