சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் ஜன.9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் நிபந்தனைகளைப் பின்பற்றி கைகுலுக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கங்களில் ஒன்றாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (எம்எச்ஏஏ) உள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சங்கத்தில் சுமார் 17 ஆயிரம் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்க நிர்வாகிகள் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தலைவராக ஜி. மோகனகிருஷ்ணன், செயலாளராக ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்டநிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2018-ம் ஆண்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதை எதிர்த்துவழக்கறிஞர் கே.சத்யபால் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலுக்கு தடைவிதித்தது.
மேலும் 5 ஆண்டுகளில் 200 வழக்குகளில் ஆஜரானவர்கள்மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிட முடியும் என்பது போன்ற புதியநிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்துஜி.மோகனகிருஷ்ணன் உள்ளிட் டோர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்ததால், கடந்த 2018முதல் இந்த தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தலுக்கான தடையை நீக்கி உத்தரவிட்டனர். அதன்படி இந்த தேர்தல் மிகுந்தஎதிர்பார்ப்புடன், நீண்ட இடைவெளிக்குப்பிறகு வரும் ஜன.9 -ம்தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அறிவுறுத்தலின்படி இந்த தேர்தலை நடத்தும் பொறுப்பு டெல்லர்கமிட்டி தலைவரான மூத்த வழக்கறிஞர் எம்.கே.கபீர், செயலாளர் சி.டி.மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தலைவர் பதவிக்கு பார் கவுன்சில் உறுப்பினர்களான ஆர்.சி.பால்கனகராஜ், ஜி.மோகனகிருஷ்ணன், எம்.வேல்முருகன், கே.சத்யபால், எஸ்.மகாவீர் சிவாஜி, ஏ.மோகன்தாஸ் உட்பட 9 பேர் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு ராம.சிவசங்கர், ஆர்.முரளி, எஸ்.அறிவழகன் உள்ளிட்ட 8 பேரும், செயலாளர் பதவிக்கு ஆர்.கிருஷ்ணகுமார், எஸ்.காமராஜ், ஆர்.மோகன்தாஸ் உள்ளிட்ட 10 பேரும், பொருளாளர் பதவிக்கு ஜி.ராஜேஷ், வி.ஆனந்த், டி.ஆர்.தாரா உள்ளிட்ட 9 பேரும், நூலகர்பதவிக்கு கஜலட்சுமி ராஜேந்திரன், ஜிம்ராஜ் மில்டன், சத்தியசீலன் உள்ளிட்ட 12 பேரும் போட்டியிடுகின்றனர்.
இதுதவிர 6 மூத்த செயற்குழுஉறுப்பினர்கள் பதவிக்கு ஏ.ரமேஷ், ஏ.இந்தியன், பி.குமணன் உள்ளிட்ட 42 பேரும், 6 இளைய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு பி.டி.அன்பரசன், சுதாகர், ஆதித் விஜய்உள்ளிட்ட 35 பேரும் போட்டியிடு கின்றனர்.
இந்த தேர்தலுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கக்கூடாது, அன்பளிப்புகள் வழங்கக்கூடாது என பல்வேறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியான முறையில், வாக்களிக்க தகுதியான வழக்கறிஞர்களிடம் கைகுலுக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரம்பரியமிக்க இந்த சங்கத் தேர்தலில் வெற்றி பெறுவதை கவுரவப் பிரச்சினையாக கருதுவதால், தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர்.சி.பால்கனகராஜ், ஜி.மோகனகிருஷ்ணன், எம்.வேல்முருகன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.