2022-ஆம் ஆண்டு தங்களின் தனித்துவத்தால் கவனம் ஈர்த்த அரசியல் முகங்கள் வரிசையில் இப்போது பிரதமர் நரேந்திர மோடி குறித்த விரைவுப் பார்வை இது.
இந்திய அரசியலில் நரேந்திர மோடி என்பது வெறும் பெயரல்ல… பாஜகவின் முகம். எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் அங்கு பாஜக சார்பில் முன்னிறுத்தப்படும் ஒற்றை அடையாளம் மோடி. அனைத்து அலுவல்களுக்கும் இடையேயும் உத்தரப் பிரதேச தேர்தலாக இருக்கட்டும் குஜராத் தேர்தலாக இருக்கட்டும், இமாச்சலப் பிரதேச தேர்தலாக இருக்கட்டும் முழு வீச்சில் பிரச்சாரம் செய்கிறார் பிரதமர் மோடி. பிரச்சாரத்தின் போது பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி அமைய வாக்களியுங்கள் என்றுதான் பிரச்சாரம் செய்கிறார்.
மத்தியில் பாஜக, மாநிலங்களிலும் பாஜக அதுதான் அந்த இரட்டை இன்ஜின் அரசின் இலக்கு. பெரும்பாலும் அவரது பிரச்சாரங்கள் எடுபடவே செய்கின்றன. அதனால் தான் பாஜக வெற்றியை இவிஎம் இயந்திர மோசடி என்று இன்னும் விமர்சித்துக் கொண்டே இருந்தால் நீங்கள் முட்டாள்களே என்றோர் அரசியல் விமர்சகர் கூறியிருந்தார். அண்மையில் நடந்து முடிந்த குஜராத் தேர்தல் வெற்றியை மோடியின் சக்திக்கு, மோடியால் இந்திய அரசியலில் என்ன செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கடந்த மார்ச்சில் வெளியானது. அதில் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அந்த வெற்றியை பிரதமர் மோடி அடுத்த நாள் குஜராத்தில் கொண்டாடினார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 9 மாதங்களுக்கு முன்னரே அவர் தனது முதல் பிரச்சாரத்தை குஜராத்தில் ஆரம்பித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
வெற்றிப் பேரணியை குஜராத்தில் மேற்கொண்டு மக்கள் மனதில் பாஜகவின் வலிமை என்னவென்பதை விதைத்தார். குஜராத்தில் காங்கிரஸ் உட்கட்சி பூசலில் பரபரப்பாக இருந்த சூழலில் அவர் வெற்றிப் பேரணியை நடத்திச் சென்றார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் குஜராத் மாநிலத்திற்கு முதன்முறையாக வருகை தந்த பிரதமர் மோடி தனது சொந்த ஊரான வல்சட் கிராமம் கப்ரடாவில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ‘நான் உருவாக்கிய குஜராத்’ (I have made this Gujarat) என்று முழக்கத்தை அறிவித்தார். குஜராத்தி மொழியில் அவர் இதனை அறிவித்தார்.
மோர்பி பால விபத்து நடந்தபோது இது பாஜகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், மோர்பியில் பாஜக வேட்பாளர் தான் வெற்றி பெற்றிருக்கிறார். பட்டிதார் சமூகத்தினரிடம் நிலவிய அதிருப்தி, ஆதிவாசி மக்கள் மத்தியில் நிலவிய பதற்றம் என எல்லாவற்றையும் சரிகட்டி வரலாற்று வெற்றிக்கு வித்திட்டிருக்கிறார் மோடி.
2024 மக்களவை தேர்தலிலும் கூட பாஜக நம்பியிருக்கும் அடையாளம் மோடியாகவே இருக்கிறார். அதனால்தான் இந்திய அரசியலில் நரேந்திர மோடி என்பது வெறும் பெயரல்ல பாஜகவின் முகம்.
2022-ன் இந்திய அரசியல் முகங்கள்: ராகுல் முதல் கேஜ்ரிவால் வரை.. கட்டுரையில் இருந்து.