சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டு தேர்தலையும் கருத்தில் கொண்டு ஆளும்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளன.
அதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி, ஆளும் கட்சியை குறிவைத்து ‘இது என்ன கருமம் நமது மாநிலத்திற்கு’ என்ற பெயரில் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
நேற்று நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கந்துக்கூரில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், தெலுங்கு தேசம் கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கடுமையான கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்திரபாபு நாயுடு நேரடியாக சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
newstm.in