'கலகத் தலைவனுக்கு' கழகத் தலைவர் வைத்த அன்பான வேண்டுகோள் – என்ன தெரியுமா?

CM Stalin Speech in Trichy : தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டார். முன்னதாக இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், திமுக நிர்வாகிகள்,  தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இவ்விழாவில் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா வரவேற்புரை வழங்கினார். அதனை தொடர்ந்து தமிழக முதல்வருக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 7 அடி உயரமுள்ள வெள்ளி செங்கோல் வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் வெள்ளி கேடயம் வழங்கினார்.

சுய உதவிக்குழுவின் தோற்றம் 

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,”ஒரு ஆண்டு மனநிறைவுடன் நினைவு பெறுகிறது. தென்காசி மாவட்டத்தில் ஆராதனா என்ற பெண் பள்ளியை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றி உள்ளார் . அவருக்கு அந்த மாணவி கடிதம் எழுதியுள்ளார். எங்களுக்கு இன்று தான் ஆங்கில புத்தாண்டு.  எனவே பரிசுகளை பெற வந்திருக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”நான் அமைச்சராக பொறுப்பேற்று முதல்முறை திருச்சிக்கு வந்திருக்கிறேன். 1989இல் கலைஞர் தர்மபுரியில் தொடங்கிய திட்டம்தான் சுய உதவி மகளிர் குழு. அதன்பின் 1996இல் மீண்டும் ஆட்சியை பிடித்தபோது தமிழகம் முழுவதும் 4 லட்சம் குழுக்கள் வளர்ந்தது” என்றார். 

பேரரசர் தளபதி, சிற்றரசர் உதயநிதி

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,” ஒரு வருடத்தில் இரண்டாவது முறையாக வந்திருக்கிறார். அவர் அடிக்கடி வரவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கலைஞர் ஆட்சிசெய்த 60 மாதங்களில் 50 முறை திருச்சிக்கு வந்திருக்கிறார். அதேபோல் 5 மணி நேரம் மேடையில் நின்று கொண்டே மகளிர் சுய உதவி குழுக்களுக்கான நலத்திட்டங்களை தந்தார்.

தற்போது திருச்சியில் அமைச்சர் உதயநிதி தொடங்கிய மகளிர் திட்டம் வெற்றிபெரும். திருச்சியில் தொடங்கப்பட்ட எல்லாமே வெற்றி பெரும். அதேபோல் அனைத்து துறைகளிலும் மகளிர் குழுக்களின் பங்களிப்பு உள்ளது. கேட்டதெல்லாம் வழங்கும் உங்களுக்கு இந்த திருச்சி மக்கள் உங்கள் முன்பும், பின்பும் என்றும் நிற்போம். பேரரசர் தளபதி, சிற்றரசர் உதயநிதி உங்களுக்காக என்றும் நாங்கள் உடன் இருக்கிறோம்” என்றார்.

உதயநிதியை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்

அடுத்து பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,”மாரத்தான் வீரரான மா.சுப்பிரமணியன் தன்னுடைய துறையில் ஓடிய ஓட்டத்தின் விளைவுதான் மக்களை தேடி மருத்துவம் தொடங்கபட்டு 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.  அந்த 1 கோடியாவது பயனாளி திருச்சியை சேர்ந்தவர் என்பதால் அவரை இன்று நான் சந்திக்க் உள்ளேன்.

அமைச்சரவைக்கு புதியவராக வந்துள்ள உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை, மகளிர் மேம்பாடு, வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் உள்ளிட்ட துறைகளை வழங்கி உள்ளோம். எனவே அவருடைய துறையை மிகச்சிறப்பாக மேம்படுத்துவார் என்று முதலமைச்சராக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்பட உள்ளது. இது கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவிக்கபட்டது. அதில் திருச்சி மாவட்டத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்படும். 

இதுவரை தமிழகத்தில் நடை பெற்ற அரசு விழாக்கள் அனைத்தும் மக்கள் விழாவாகதான் நடைபெற்றுள்ளது. அந்த ஒவ்வொறு விழாக்களிலும் 1 லட்சம் மக்கள் நேரடியாக பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரம் குழுக்கள் உள்ளன. அதில் 50 லட்சத்து 24ஆயிரத்து உறுப்பினர்கள் உள்ளனர்.

2021-2022 நிதி ஆண்டில் சுய உதவி மகளிர் குழுக்களுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூ. 21 ஆயிரத்து 392 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 52 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 2022-2023 நிதி ஆண்டில் ரூ. 25ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த மாதம் 16ஆம் தேதி வரை ரூ.14.25 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவையும் வழங்கப்படும்.

அண்ணாவையும் கலைஞரையும் காண்கிறேன்

கடந்த காலங்களில் பெய்த மழையில் அடித்த புயலில் எந்தவித பாதிப்பையும் பொதுமக்கள் உணராத அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி பணியாற்றி உள்ளது. இதை யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காக கூறவில்லை.  கடந்த ஓராண்டில் ஏறத்தாழ 8549 கி.மீ., தூரம் பயணம் செய்துள்ளேன். அதில் மொத்தம் 647 நிகழ்ச்சிகள், அதில் அரசு விழா 551, கட்சி விழா 96. இந்த நிகழ்ச்சிகள் மூலம் ஒரு கோடியே மூன்று லட்சத்து 74 ஆயிரத்து 355 பேர் நேரடியாக பயனடைந்துள்ளனர். 

பொதுவாக ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதாக பழமொழி கூறுவார்கள். ஆனால் நான் எனக்கென்று ஒரு அளவுகோல் வைத்துள்ளேன். அதில் ஏழையின் சிரிப்பிலும் இந்த மகளிரின் முகத்தில் மகிழ்ச்சியையும் அண்ணாவையும் கலைஞரையும் காண்கிறேன். அதுதான் நான் வைத்திருக்கும் அளவுகோல். 

உதயநிதிக்கு ஸ்டாலின் அன்பு கோரிக்கை 

எனவே அமைச்சராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய உதயநிதிக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள். இந்த மகளிர் எப்போதும் உயர்ந்து இருக்க வேண்டும் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும். எனவே புதிய அமைச்சர் சிறப்பாக செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன் என்றார்.

பின்னர் ரூ.655 கோடி மதிப்பீட்டிலான 5,639 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.308 கோடி மதிப்பீட்டிலான 5951 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து ரூ.79 கோடி மதிப்பீட்டிலான 22,716 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார். அதில் 4,000 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல்நிதியும், கடன் உதவியும் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியிலுள்ள டிஎன்பிஎல் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிய காகித ஆலையை தொடங்கி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.