லீவெல்லாம் கிடையாது… ஸ்கூலுக்கு வந்துருங்க – அமைச்சர் கொடுத்த ஷாக்

Pongal 2023 Holidays: பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமல்லாது தமிழர்கள் நிறைந்திருக்கும் இடங்களில் எல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பொங்கலான நேற்று (ஜன. 15) சூரிய பகவானுக்கு படையலிட்டு நன்றி தெரிவிக்கும் விதமாக சூரிய பொங்கலும், மாட்டு பொங்கலான இன்று (ஜன. 16) விவசாயத்துக்கு உதவியாக இருக்கும் ஆடு மாடுகளுக்கு பொங்கலும் வைக்கப்படுகிறது.

காணும் பொங்கலான நாளை (ஜன. 17) உற்றார் உறவினர் வீடுகளுக்கு சென்று விருந்து சமைத்து சாப்பிடுவார்கள். இதனைக் கருத்தில் கொண்டு விடுமுறை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் விதமாக ஜனவரி 18 (புதன்கிழமை) அன்று பொது விடுமுறையை அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. 

போகிப் பொங்கல், தைப் பொங்கல் முறையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்ததை அடுத்து, ஏற்கெனவே மாட்டு பொங்கலான இன்றும் (ஜன. 16), நாளையும் (ஜன. 17) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஜன. 18ஆம் தேதியும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குஷியில் இருந்தனர். 

ஆனால், அந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மறுத்துள்ளார். இதுகுறித்து, சென்னை நந்தனம் பகுதியில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பில், ‘வரும் புதன்கிழமை அன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி வெளியூர் வந்துள்ள பெற்றொரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். புதன்கிழமை விடுமுறை இல்லை என்பதால் நாளை மாலை முதல் அனைவரும் சொந்த ஊர் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.