காவல் துறை வேலைவாய்ப்புகளில் போலீஸாரின் வாரிசுகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: தமிழக போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல் துறை வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் மன உறுதி, விசுவாசம், நேர்மையை ஊக்கப்படுத்தும் வகையில், போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல்துறை வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதனடிப்படையில், கடந்த 2001-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், காவல் துறையின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருவரின் மகன், தனக்கும் இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, பொது வேலைவாய்ப்பில் நுழையும் வாய்ப்பு, அனைத்து குடிமக்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டுமென தெரிவித்தனர். மேலும், 10 சதவீத இடஒதுக்கீடு சட்டவிரோதமானது என்று கூறி, அரசாணையை ரத்து செய்து கடந்த 2018-ல் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து 100-க்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தநிலையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ்.ஒஹா,பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மற்றும் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோர் ஆஜராகி, ‘‘தமிழக காவல் துறையில் பணிபுரியும் காவலர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசாணை எந்த விதத்திலும் சட்டவிரோதமானது அல்ல. இந்த வேலைவாய்ப்பு காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் உத்வேகத்தையும், மனஉறுதியையும் அதிகரிக்கச் செய்யும். இந்த இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளை முறையாகஆய்வு செய்யாமல் ரத்துசெய்திருப்பதால், போலீஸாரின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல் துறையில் உள்ள காலி பணியிடங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசாணை செல்லும். அதனடிப்படையில் தற்போது வழக்குத் தொடர்ந்துள்ளவர்கள் மட்டுமின்றி, தகுதி வாய்ந்த அனைவருக்கும் உரிய இடஒதுக்கீட்டைப் பின்பற்றி பணி வழங்கலாம்.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு காரணமாக விண்ணப்பித்து, வாய்ப்பு இழந்த தகுதியானவர்களுக்கும், இந்த உத்தரவின் அடிப்படையில், வயதுவரம்பைத் தளர்த்தி தமிழக காவல்துறையில் பணி வழங்க எவ்வித தடையும் இல்லை” என்று உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.