பேனட் மீது மரண பயத்தில் இளைஞர்; 3 கி.மீ-க்கு வேகமாக காரை ஓட்டிய பெண்! – பெங்களூரில் அதிர்ச்சி

கர்நாடக மாநிலம், பெங்களூர் நகரில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு, வாகனம் ஓட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முதியவரை ஒரு கிலோ மீட்டருக்கு தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு குறைவதற்குள் இன்று மதியம், பெங்களூர் ஞான பாரதி நகரில், உல்லால் ரோட்டில், கார் பேனட் மீது வாலிபர் ஒருவர் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலற, காரை நிறுத்தாமல் ஆக்ரோஷமாக மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு, ஒரு பெண் காரை ஓட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், காரின் மீதிருந்த இளைஞர் தர்ஷன் (29) என்பதும், காரை அதிவேகமாக ஓட்டியது பிரியங்கா என்பதும் தெரியவந்திருக்கிறது. தர்ஷன், பிரியங்கா ஆகியோர் தனித்தனி காரில் வந்தபோது, கார்கள் மோதி சிறு விபத்து ஏற்பட்டு, இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து இளம்பெண் ஓட்டிவந்த காரின் முன் பகுதிக்கு வந்து தர்ஷன் வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது, பிரியங்கா அவரை இடிக்க முயன்றிருக்கிறார். அதனால், தர்ஷன் கார் பேனட் மீது ஏறியிருக்கிறார். அதைக் கண்ட பிரியங்கா, அதிவேகமாக காரை இயக்கி, மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓட்டிச் சென்றிருக்கிறார். அப்போது, பிரியங்காவின் கணவர் பிரமோத் உடனிருந்திருக்கிறார்.

கார் மீது இளைஞர்

இந்தச் சம்பவம் தொடர்பாக, “கார் இடித்தபோது கூட்டமாக வந்த தர்ஷன் எங்களை மிரட்டியதுடன், என் மனைவியின் துணியை பிடித்து இழுத்து, தகாத வார்த்தைகளால் திட்டினார். நாங்கள் பயத்தில் காரை எடுக்க முயன்றபோது, பேனட்டில் ஏறியதுடன், அவருடன் வந்தவர்கள் மிரட்டியதால், அங்கிருந்து தப்பிக்க காரை ஓட்டிச்சென்றோம்’’ என பிரியங்காவின் கணவர் பிரமோத் போலீஸ் ஸ்டேஷனில் புகாரிளித்திருக்கிறார்.

இதேபோல், தர்ஷன் போலீஸாரிடம், ‘‘கார் மோதியது குறித்து கேட்கச் சென்றபோது பிரியங்கா தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ஆபாசமாக விரலை காட்டி அசிங்கப்படுத்தினார். நியாயம் கேட்கச் சென்றபோது, அவர் என்னை மோதியதும், நான் தப்பிக்க பேனட்டில் ஏறியபோது, மூன்று கிலோ மீட்டர் இழுத்துச்சென்றார்” எனப் புகார் தெரிவித்திருக்கிறார்.

பிரமோத், பிரியங்கா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், தர்ஷன் மீது பெண்ணை மானப்பங்கம் செய்ய முயன்றது, தாக்க முயன்றது, தகாத வார்த்தைகளால் திட்டியது என பத்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம், பிரியங்கா, அவர் கணவர் பிரமோத் மீது, விபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டியது, கொலை முயற்சி உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது. சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.