ind vs nz odi: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் களமிறங்கியது. இந்திய அணியை பொறுத்தவரையில் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. போட்டி ஆரம்பிக்கும்போது கேப்டன் ரோகித் சர்மா சற்று குழப்பத்தில் இருந்தாலும், முடிவு அவருக்கு சாதகமாகவே வந்திருக்கிறது.
ரோகித் சர்மா குழப்பம்
டாஸூக்கு வந்த ரோகித் சர்மா அதனை வெற்றி பெற்றார். ஆனால், பேட்டிங்கா? பவுலிங்கா? என்பதை அவரால் உடனடியாக அறிவிக்க முடியவில்லை. சற்று குழப்பத்தில் இருந்த அவர், என்ன எடுக்கலாம்? என்பதை அப்போது யோசித்துக் கொண்டே இருந்தார். இதனால் ரோகித் முடிவை அறிவிப்பதில் சில நொடிகள் நீடித்தது. நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் சிரித்தபடி ரோகித்தை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவழியாக குழப்பத்துடன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ராய்ப்பூர் மைதானம்
ராய்ப்பூர் மைதானத்தைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய மைதானம். முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானம் என்பதால், டாஸ் வெற்றி பெற்றால் பேட்டிங் செய்யலாமா? பவுலிங் செய்யலாமா? என்ற யோசனை ரோகித்திடம் இருந்தது. இது குறித்து அணிக்குள் பல முறை கலந்தாலோசித்திருந்தாலும், உடனடியாக பவுலிங் முடிவை ரோகித்தால் எடுக்க முடியவில்லை. டாஸ்போடும்போது கூட என்ன எடுக்கலாம் என்பதை பலமுறை அணிக்குள் விவாதித்ததாகவும், அதனால் குழப்பம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தார். பனிப்பொழிவு காரணமாக பொதுவாக இரண்டாவது பேட்டிங் எடுக்கும் அணி வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. அதுவே இந்தியா – நியூசிலாந்து போட்டியிலும் நடந்திருக்கிறது.
இந்திய அணி அபாரம்
அதன்படி, முதலில் பேட்டிங் இறங்கிய நியூசிலாந்து அணி எதிர்பார்த்ததுபோலவே ஆரம்பம் முதலே தடுமாறியது. 15 ரன்களுக்குள் 5 விக்கெடுட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. இவ்வளவு மோசமான நிலையில் இருந்த நியூசிலாந்து அணியை சானட்டர் மற்றும் கிளென் பிலிப்ஸ் கவுரமான நிலைக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். இருப்பினும் முடிவில் நியூசிலாந்து அணி 108 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 36 ரன்களும், சானட்டர் 27 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி வெற்றி
தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருந்த இந்திய அணி, நியூசிலாந்தை குறைவான ஸ்கோரில் கட்டுப்படுத்திய மகிழ்ச்சியில் 2வது பேட்டிங் இறங்கியது. ரோகித் மற்றும் சுப்மான் கில் சூப்பரான ஓப்பனிங்கை கொடுத்தனர். கேப்டன் ரோகித் 51 ரன்கள் விளாசி அவுட்டாக, சுப்மான் கில் 40 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 20.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் தொடரையும் கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் பல்வேறு சாதனைகளையும் இந்திய அணி படைத்திருக்கிறது.