ஆப்கானிஸ்தானில் கடும் உறை பனி; 78 பேர் உயிரிழப்பு

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த 1½ ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளின் ஆட்சி நடந்து வருகிறது. இவர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை எந்தவொரு நாடும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த நாட்டுக்கான சர்வதேச நிதிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அதோடு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தான் அரசுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆப்கானிஸ்தானில் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டு உணவு பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

ஒருபுறமும் தலீபான்களின் அடக்குமுறை, மறுபுறம் உணவு பஞ்சம் போன்ற நெருக்கடி போன்றவற்றால் 2 கோடிக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த சூழலில் இயற்கையும் தன் பங்குக்கு ஆப்கானிஸ்தான் மக்களை துயரப்படுத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

குறிப்பாக தலைநகர் காபூல் மற்றும் அதனை சுற்றியுள்ள சில மாகாணங்களில் வெப்பநிலை மைனஸ் 28 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என எங்கு பார்த்தாலும் பனித்துகள் குவிந்து கிடக்கின்றன. குளிர் வாட்டி வதைத்து வருவதால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

உறை பனி மற்றும் கடும் குளிர் காரணமாக கடந்த 9 நாட்களில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 78 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் உறை பனியால் ஆடு, மாடு உள்பட 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் செத்ததாக தலீபான் அரசின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில் ‘இந்த குளிர்காலம் சமீப காலங்களில் மிகவும் மோசமானதாக மாறியுள்ளது. ஆண்டின் இந்த நேரத்தில் வெப்பநிலை சராசரிக்கும் குறைவாக உள்ளது. நாட்டின் வடக்கு பகுதிகளில் மிகவும் குளிரான நிலைமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரும் வாரத்தில் குளிர் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என கூறினர்.

இதனிடையே பனிப்பொழிவு மற்றும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவி குழுக்கள் குளிர்காய்வதற்கான எரிபொருட்கள், வெப்பமான ஆடைகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன.

அதே வேளையில் தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தலீபான்கள் கடந்த மாதம் தடைவிதித்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் கடும் சிக்கல் நீடிப்பதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக தலீபான்களின் தடையை தொடர்ந்து ஏராளமான வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் தங்களின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.