ஈரோடு கிழக்கு: “அதிமுக சார்பில் போட்டி; எடப்பாடியுடன் பேச தயார்; பாஜக கேட்டால்…” – பன்னீர்செல்வம்

2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வெ.ரா திருமகன் வெற்றிபெற்றார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் சமீபத்தில் அவர் மரணம் அடைந்தார். இதனால் காலியான ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 18-ம் தேதி அறிவித்தது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. திமுக கூட்டணியை பொருத்தவரை ஈரோடு கிழக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட, காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்திருந்தார்.

அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நிலையில், தற்போது அதிமுக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதன் காரணமாக அதிமுக-வுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்க சம்மதம் தெரிவிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்திருந்தார். அதிமுக கூட்டணியில் பாஜக இன்னும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டிடுவதா கூட்டணிக்கு ஆதரவா என்ற தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

எடப்பாடி – பன்னீர்

ஒற்றைத் தலைமை பிரச்னை வந்த பிறகு, அதிமுக எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது என்பதால், இதில் பன்னீர்செல்வத்தின் செயல்பாடு மிக முக்கியமாக கவனிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக தங்கள் வேட்பாளர் போட்டியிட இருப்பதாக அறிவித்தார். மேலும் அதிமுக நலனுக்காக எடப்பாடி பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், “அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கியது நாங்கள் அல்ல. அதிமுக விதிகளின்படி தான் கட்சி நடக்க வேண்டும் என்பதுதான் எங்களின் தற்போதைய தர்மயுத்தம். இரட்டை இலை சின்னம் முடங்கி போக ஒருபோதும் நான் காரணமாக இருக்க மாட்டேன். ஒருவேளை சின்னத்தை தேர்தல் ஆணையமே முடக்கினால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம். அதிமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்திடமும் பேசுவோம். கூட்டணி கட்சியினரும் எங்களிடம் பேசி தான் வருகின்றனர். ஒருவேளை பாஜக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆதரவு கேட்டால் ஆதரவு அளிக்கவும் தயாராக இருக்கிறோம்.

ஓ,பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் தற்போதைய நிலவரப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையே உள்ளது. அதன்படி தேர்தல் ஆணையத்தின் ஃபார்ம்களில் நான் கையெழுத்து போடுவேன். உள்ளாட்சி தேர்தலிலேயே நான் ஒருங்கிணைப்பாளராக கையெழுத்து இட்டேன். எனினும் எடப்பாடி பழனிசாமி தான் கையெழுத்து இட வில்லை.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.