ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம். 2026ஆம் ஆண்டு வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தகுதியை பொதுக்குழு எனக்கு அளித்துள்ளது. அதனால் இரட்டை இலை சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம். இது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டுவோம். கூட்டணிக் கட்சியினர் எங்களுடனும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒருவேளை பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவளிப்போம். ஒருவேளை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் சுயேட்சையாக போட்டியிடுவோம். ஆனால் ஒருபோதும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட நான் காரணமாக இருக்க மாட்டேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது தான் எங்களின் நிலைப்பாடு. அதிமுகவின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமியுடன் பேசத் தயாராக இருக்கிறேன். இப்போதும் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்.

அதிமுக அதன் விதிகளின்படி நடத்தப்பட வேண்டும் என்பது தான் எனது தர்மயுத்தம். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் விருப்பமும் கூட. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை இருப்பதால் நாங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

வரும் 23 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் அதில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஈரோடு கிழக்கு தொகுதி: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கே வாய்ப்பு அளிக்கலாமா அல்லது அவரது குடும்பத்தாரை நிறுத்தலாமா என தேசிய தலைமையுடன் கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு தெரிவித்துள்ளது. அத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை நிறுத்த அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.