“கரூரில் எந்நேரமும் மது விற்பனை; அமைச்சரோ கோவையில்"- செந்தில் பாலாஜியைச் சாடிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் அ.தி.மு.க கட்சி சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டம், கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அ.தி.மு.க முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு, காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்றுவருகிறது. கரூரிலும் 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. அரசு மதுபானக் கடைகளில் இரண்டு வகையான மதுக்கள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றம்ன. அரசு கொள்முதல் செய்யும் மதுபானங்கள் தவிர, பார்களில் இருபது ரூபாய்க்கு வாங்கப்படும் மது வகைகள் 200 ரூபாய்க்குத் தனியாக விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுக்கூட்டத்தில் பேசும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழக மதுவிலக்குத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான கரூரில், திருவள்ளுவர் தினத்தில் மது விற்பனை நடைபெற்றது. இது குறித்து, செய்தித்தாள்களில் செய்தி வந்திருக்கிறது. ஆனால், எவ்வித நடவடிக்கையையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி பெற்றுத்தந்தது அ.திமுக அரசு. கரூர் அரவக்குறிச்சி பூலாம்வலசு பகுதியில் பாரம்பர்ய முறைப்படி நடத்தப்படும் பூலாம்வலசு சேவல் கட்டு போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால், போட்டி நடைபெறவில்லை. நான் அமைச்சராக இருந்தபோது, மூன்று முறை அனுமதி பெற்றுக் கொடுத்து, சேவல் கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. நடப்பாண்டில் அனுமதி பெற்றுக்கொடுத்து சேவல் சண்டை நடத்துவதற்கு, கரூர் மாவட்டத்திலுள்ள அமைச்சருக்கு நேரமில்லை.

கோவையில்தான் அவரைச் சந்திக்க முடியும். கட்டுமானத் தொழிலில் கம்பி, சிமென்ட், மணல் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் கடுமையாக விலை உயர்ந்திருக்கின்றன. கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தங்க நாற்கர சாலைகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றுவருகின்றன. கரூர் வேலாயுதம்பாளையம், செம்படை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகள் உட்பட ஆறு மேம்பாலப் பணிகளுக்கு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நான் அமைச்சராக இருந்தபோது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மூலம் கோரிக்கை மனு அளித்து, தற்போது இரண்டு இடங்களில் பாலப் பணிகள் நிறைவு பெற்று, மற்ற இடங்களில் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

பொதுக்கூட்டத்தில் பேசும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஒரு லாரி மணல் ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையெல்லாம் கேட்பதற்கு நாதி இல்லை. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் நேரடியாக வெற்றிபெற முடியாது எனத் தெரிந்துகொண்டு, குறுக்குவழியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களை அச்சுறுத்தியும், அடியாட்களை வைத்து கடத்தியும் வெற்றிபெற்றிருக்கின்றனர். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பெரும்பான்மையாக வெற்றிபெற்ற அ.தி.மு.க உறுப்பினர்கள் தேர்வுசெய்த மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவியை, தி.மு.க குறுக்குவழியில் கைப்பற்றியிருக்கிறது. இவற்றுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.