‘தலைநிமிர்ந்த தமிழ்நாடு; தனித்துவமான பொன்னாடு’ – நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தை தொடங்கிய திமுக

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஓராண்டுக்கும் மேல் இருக்கும் நிலையில், இப்போதே திட்டங்களை முன்னிறுத்தி சமூகவலைதளம் மற்றும் போஸ்டர் பிரச்சாரத்தை திமுக தொடங்கிவிட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும்மேல் உள்ள நிலையில், தற்போதே பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டன. அனைத்து அரசியல் கட்சிகளும் முதல்கட்டமாக, ‘பூத் ஏஜென்ட்’களை நியமிக்கும் பணிகளை பெரும்பாலும் முடித்துவிட்டன. இதில் தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக, படித்தவர்கள், வழக்கறிஞர்கள், திறமைசாலிகளை தேர்வு செய்து பூத் ஏஜென்ட்களாக நியமித்துள்ளது.

இதுதவிர, திராவிட மாடல் பாசறை கூட்டங்களை இளைஞரணி நடத்துவதுடன், திண்ணை பிரச்சாரங்களையும் அவ்வபோது முன்னெடுத்து வருகிறது. தேர்தல் பணிகளுக்கான ஆட்கள் நியமனம், பிரச்சாரங்களை தாண்டி தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், தேர்தலுக்கான முன்னோட்ட பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. முக்கியமான திட்டங்களை முன்னிறுத்தி போஸ்டர்கள் வெளியிட்டு அவற்றை சமூக வலைதளம் மற்றும் அச்சடித்து வெளியிடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், ‘தலைநிமிர்ந்த தமிழகம்… மனங்குளிருது தினம் தினம்’ மற்றும் ‘மகளிர் உயர மாநிலம் உயரும்’ என்ற தலைப்புகளில் சமூகவலைதளங்களிலும், போஸ்டர்கள் மூலமும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. மாவட்டங்கள் தோறும்இந்த போஸ்டர்கள் அனுப்பப்பட்டு,மாவட்ட செயலாளர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு, ஆங்காங்கே ஒட்டப்பட்டன. இவற்றை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பரப்பினர். இந்த விளம்பரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது அடுத்த பிரச்சார போஸ்டரை திமுக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று குறிப்பிடுவதில் சர்சசை கிளம்பியது. எனவே, அடுத்த போஸ்டரில் தமிழகம் என்பது தமிழ்நாடாக மாற்றப்பட்டுள்ளது. ‘தலை நிமிர்ந்த தமிழ்நாடு. தனித்துவமான பொன்னாடு’ என்று முகப்பு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், ஆட்சியில் அறம், அனைவரும் நலம், 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள், நீர்ப்பாசன சாகுபடியை 38.94 லட்சம் எக்டேராக உயர்த்தியது, விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கியது என்ற அரசின்திட்டங்கள் இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளன.

இனி, வாரம்தோறும் ஒரு சாதனையை முன்னிறுத்தி இந்த போஸ்டர்கள் வெளியிடப்படும் என திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியினர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘திமுகவின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் இந்த பிரச்சார போஸ்டர்களுக்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது. அரசின் திட்டங்களால் பொதுமக்கள் பெற்ற பயன்களை வெளிச்சம் போட்டு காட்டுவதுஇதன் நோக்கம். நாடாளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே என்பதை உறுதி செய்ய இந்த பிரச்சாரம் கைகொடுக்கும்’’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.