ஆளுநரை நீக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கும் தனிநபர் மசோதா: தாக்கல் செய்ய உள்ளதாக திருச்சி சிவா தகவல்

மதுரை: ஆளுநர்களை நீக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இருக்கும் வகையில்  சட்டத்திருத்தம் செய்யக்கோரி தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல்  செய்ய உள்ளதாக திருச்சி சிவா எம்.பி. கூறினார்.திமுக சட்டத்துறை சார்பில், ‘இந்திய அரசியலமைப்புச்சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும்’ என்ற தலைப்பில் மதுரையில் நேற்று சட்ட கருத்தரங்கம் நடந்தது. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமை வகித்து பேசுகையில், ‘‘ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக அரசியலமைப்புச்சட்ட விவாதத்திலேயே கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஆளுநர் எப்போதும் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான்’’ என்றார்.

திமுக கொள்கை பரப்புச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி பேசுகையில், ‘‘எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் செயல்பாடு எதிராக உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம், தெலங்கானா மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடு ஏற்புடையதாக இல்லை. ஆளுநர் பொறுப்பேற்றது முதல் ஏதோ புரட்சி செய்ய வந்ததைப்போல சிலர் தவறான கருத்தை பரப்பி வருகின்றனர். அரசியலமைப்புச்சட்டத்தை மீறி வெளியிடங்களில் சில தேவையற்ற கருத்துக்களை கூறி மக்களை குழப்பும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார். ஆளுநர் என்பவர் அரசியல்வாதிகளை போல நடந்து கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் மட்டும் 20 மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.

ஆளுநரின் நடவடிக்கைகள் அரசை தேர்வு செய்த மக்களை அவமதிக்கும் செயலாகும். தமிழ்மொழியே தெரியாத ஒருவர் எப்படி தமிழ்மொழியில் உள்ள குறைகளை கூற முடியும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. நாம் அனைத்து மதத்தினரையும் பொதுவாகத்தான் பார்க்க வேண்டும். நீதிபதிகளை மக்கள் பிரதிநிதிகள் மூலம் நீக்கம் செய்யும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது. ஆனால் ஆளுநர்களை நீக்கம் செய்ய வழியில்லை. நியமனம் செய்தவர்களே திரும்பப்பெறவேண்டிய நிலை உள்ளது. எனவே ஆளுநர்களை நீக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இருக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யக்கோரி தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.