இடைத்தேர்தல்… 'மக்கள் வரிப்பணம்'.. பென்னாகரம் இடைத்தேர்தலில் பாமக வாங்கிய அடி!

ஈரோடு கிழக்கு தொகுதி தற்போது தமிழ்நாட்டின் பரபரப்பான அரசியல் களமாக மாறியுள்ளது. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக தங்களது வேட்பாளரை நிறுத்தி திமுகவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது.

ஆனால், திமுக கூட்டணி எந்த சலசலப்பும் இல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்ட நிலையில், அதிமுக இன்னமும் பாஜகவின் ஆதரவு கேட்டு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு மத்தியில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று
பாமக
வெளியிட்ட அறிவிப்பு சுயநல அரசியல் என்கின்றனர் அரசியல் பேசுபவர்கள்.

மேலும், ஈரோடு இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக, இடைத்தேர்தல் என்பது தேவையற்றது; மக்களின் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் செயல். அதனால்தான் சட்டமன்ற உறுப்பினர் காலமானதாலோ, கட்சி தாவியதாலோ சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால் அங்கு இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை என்றும் பொதுத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியை சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராகிடலாம் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் பென்னாகரம் தொகுதியில் பி.என். பெரியண்ணன் எம்எல்ஏ காலமானதால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வன்னியர்களின் கோட்டையாக இருக்கும் பென்னாகரத்தில் செல்வாக்கை காட்ட நினைத்த பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. அதேபோல, வன்னியர்களின் கோட்டையிலேயே பாமகவை வீழ்த்த திமுக பலப்பரீட்சை நடத்தியது. அதன்படி, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 77,637 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக தமிழ்க்குமரன் 41,285 வாக்குகளில் தோல்வி அடைந்தார். இருப்பினும், அதிமுக, திமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தது பாமக.

இவ்வாறு எம்எல்ஏ காலமானதால் வன்னியர்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற எண்ணி இடைத்தேர்தலில் நின்று தோற்ற பாமக இன்றைக்கு மக்கள் வரிப்பணத்தை சுட்டிக்காட்டி இடைத்தேர்தலை விமர்சித்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்கின்றனர்.

மேலும், அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள பாமக மெல்ல மெல்ல திமுக பக்கம் நகர்ந்து கொண்டிருப்பதாக சலசலப்புகள் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகாவுக்கோ அல்லது திமுகவுக்கோ ஆதரவு கொடுப்பதாக அறிவித்தால் நாளைக்கு பாராளுமன்ற தேர்தலின்போது மற்றொரு கட்சியை பாமக அணுக முடியாது. ஆகையால், இந்தத் கட்சிக்கும் ஆதரவு இல்லை சென்று கூறிவிட்டு நாளைக்கு இரண்டு கட்சிகள் அழைக்கும்போது செல்வாக்கை காட்டிக்கொள்வோம் என்ற திட்டத்தில் பாமக இடைத்தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளது என்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.