ஈரோடு இடைத்தேர்தல்: மகனுக்கு பதிலாக களமிறங்கிய ஈவிகேஎஸ்..! எதிர்கட்சிகளுக்கு வைத்த செக்

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவெரா அண்மையில் காலமானார். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகனான அவரின் மறைவைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனால், அந்த தொகுதியில் திமுக – அதிமுக நேரடியாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸூக்கே இந்த முறையும் ஈரோடு கிழக்கு தொகுதியை திமுக ஒதுக்கியது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் அந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகனின் மனைவி அல்லது இளையமகன் ஆகியோரில் யாரேனும் ஒருவர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூட, காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டதற்கிணங்க எங்கள் வீட்டில் இருந்து இளைய மகன் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்குமாறு பரிந்துரைத்துள்ளேன் என தெரிவித்தார். மேலும், தான் அந்த தொகுதியில் போட்டியிடவில்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால், இன்று காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவித்துள்ளது. அந்த தொகுதியில் தற்போதைய சூழலில் அதிமுக நேரடியாக களம் காண முடிவெடுத்துள்ளது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமாகவின் யுவராஜ் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். ஆனால், இந்த முறை அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்தது. எடப்பாடி பழனிசாமி அணியினர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை நேரடியாக சந்தித்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து அவரும் ஏற்றுக் கொண்டார்.

அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை, இரட்டை இலை சின்னம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் தேர்தலாக இதனை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அணி, அந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை களமிறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது போட்டி கடுமையாக இருக்கும் என்பதை உணர்ந்த திமுகவும், காங்கிரஸூம் ஈவிகேஎஸ் இளங்கோவனையே களமிறங்கி தங்கள் தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இந்த ஸ்கெட்சை போட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.