கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நலிந்து வரும் தென்னை விவசாயம் மீட்டெடுக்கப்படுமா? தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேவாரம்: கம்பம் பள்ளத்தாக்கில் நலிவடைந்து வரும் தென்னை விவசாயத்தை மீட்டெடுக்க உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கில், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், சின்னமனூர், உத்தமபாளையம், கோட்டூர், வீரபாண்டி, மார்க்கையன்கோட்டை என திரும்பிய இடமெல்லாம் தென்னை மரங்கள் வானில் உயர்ந்து நிற்கிறது.
தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு, அடுத்தபடியாக கம்பம் பள்ளதாக்கு தென்னை விவசாயத்தில் முன்னணி பெற்று வருகிறது. தென்னையை பிள்ளை போல் காத்துவந்த காலம் போய் இன்று தென்னைக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கு விளையும் தேங்காய் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

குறிப்பாக தேங்காய் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவை தவிர தேங்காய் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் தென்னை விவசாயத்தை நம்பி இங்கு பல்லாயிரக்கணக்கான விவசாயக் கூலி தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. தென்னை மரம் ஏறுவதற்கும், தேங்காய் உரிப்பதற்கும், தேங்காய் விவசாயத்தை பராமரிப்பதற்கு என்றே கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் மாவட்டத்தில் உள்ளனர். இதனால் தென்னை விவசாயம் மிகச் சிறப்பாக தேனி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை விவசாயத்தின் மதிப்பு கூட்டு பொருளாக தேங்காயில் இருந்து பெறப்படும் நார், கயிறு உற்பத்திக்கும், இதேபோல் இதன் மட்டை விளக்குமாறு உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

இதனை நம்பியும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. ஆனால் இன்று தென்னைக்கு உரிய விலையில்லாமல் விவசாயிகள் ஏங்கி தவிக்கும் நிலை உள்ளது.ஒரு காலத்தில் தென்னந்தோப்பில், தேங்காய் வெட்டும்போது ஒரு காய் ரூ.15 முதல் 20 வரை விலைபோன காலங்கள் உண்டு. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது தேங்காய் தற்போது ஒன்பது ரூபாயில் இருந்து பத்து ரூபாய் மட்டுமே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. இதனால் தென்னை விவசாயத்தை நம்பி உள்ள பல ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.தேனி மாவட்டத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேங்காய் அதிக அளவில் கொப்பரைக்கு அனுப்பப்படுகிறது.

இதன்மூலம் எண்ணெய் உற்பத்திக்கு தேங்காய் செல்கிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிகமான எதிர்பார்த்த விலை கிடைப்பது இல்லை. இதனால் தென்னை மரம் ஏறுவோர் தென்னை விவசாயத்தை நம்பி தொழில் செய்தவர்கள், இன்று மாற்று வேலையாக கட்டிட வேலைகளுக்கு செல்லும் நிலை உள்ளது. தென்னை விவசாயி செல்லவர் கூறும்போது, ‘‘தேனி மாவட்டத்தில் தென்னை நாருக்கு உரிய விலை கிடைப்பதில்லை இதனால் பல இடங்களில் கயிறு மில்கள் அடைக்கப்பட்டுள்ளன.இதனால் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை. தேங்காய் மட்டை 10 பைசாவிற்கே செல்கிறது. தென்னை விவசாயிகள் வேறு விவசாயத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தென்னை விவசாயத்தை ஊக்குவிப்பதற்குரிய நடவடிக்கையை எடுப்பதுடன், தமிழக அரசே தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.