தமிழகத்தில் 71 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1.14 லட்சம் பேருக்கு வேலை: அமைச்சர் சி.வி.கணேசன்

கரூர்: தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடத்தப்பட்ட 71 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1.14 லட்சம் பேருக்கு பணிகள் வழங்கப்பட்டு உள்ளதாக மாநில தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் நலத்துறை, கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், கரூர் மாவட்ட மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று (ஜன. 22) கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது.

கல்லூரி கலையரங்கத்தில், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் முகாம் தொடக்க விழா நடைபெற்றது. மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி முகாமை தொடங்கி வைத்து பேசியது, ”கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தில் 42,000 ஆண்கள், 48,000 பெண்கள், 1,414 மாற்றுத்திறனாளிகள் என 91,000த்திற்கும் அதிகமானவர்கள் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். வேலை தேவைப்படுபவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது அரசின் கடமை உங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். ஆண்டுதோறும் கரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.” என்றார்.

மாநில தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்று தொழில் திறன் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள், இளம் பெண்களுக்கு பயிற்சிக்கான பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது, திமுக ஆட்சி பொறுப்பேற்றப்பிறகு இதுவரை 71 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1.14 லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

இங்கு நடைபெறும் முகாமில் 262 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை, முயற்சி வேண்டும். முன்னேறவேண்டும் என்ற சிந்தனை வேண்டும். அதற்கேற்ற உழைப்பு வேண்டும். இருந்தால் வாழ்வில் வெற்றிபெறலாம் என்றார்.

எம்எல்ஏக்கள் மாணிக்கம் (குளித்தலை), பி.ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணைமேயர் ப.சரவணன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) ஞானசேகரன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சீனிவாசன், கரூர் மாநகராட்சி துணை மேயர் ப.சரவணன், கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, மண்டல தலைவர் எஸ்.பி.கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.