நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக புறவழிச்சாலை விரைவில் அமையுமா? அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக புறவழிச்சாலை விரைவில் அமையுமா?  என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்திருக்கின்றனர். பொள்ளாச்சி நகரில் இருந்து பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலை ரோடுகளில் ஒன்றாக கருதப்படும் பாலக்காடு ரோட்டில்  பகல் மற்றும் இரவு நேரத்தில் தொடர்ந்து வாகன போக்குவரத்து இருக்கும். இவ்வழியாக, நல்லூர், முத்தூர், மண்ணூர், ராமபட்டிணம், கோபாலபுரம் மற்றும் கேரள பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி கோவை ரோடு சக்திமில் பகுதில் இருந்து மீன்கரை ரோடு ஜமீன் ஊத்துக்குளி கைக்காட்டி வரையிலும் உள்ள ஒரு வழிபாதையை, இரண்டு வழி பாதையாக மேற்கு புறவழிச்சாலை அமைக்க, சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

இதைத்தொடர்ந்து புறவழிச்சாலை அமைய உள்ள ஆ.சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, முத்தூர், நல்லூர் பிரிவு, ஜமீன்ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் வெவ்வேறு கட்டமாக கருத்து கேட்பு கூட்ட நடைபெற்றுள்ளது. மேலும், மேற்கு புறவழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆச்சிப்பட்டி அருகே சக்தி மில்லில் இருந்து பாலக்காடுரோடு ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி வரையிலும் சுமார் ரூ.52 கோடியில்,  புறவழிச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி நடந்தது. மேலும் சில நாட்களில் பணி துவங்கப்பட்டது. இதற்காக, புறவழிச்சாலை அமைய உள்ள பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலப்பகுதில் விரிவாக்கம் செய்யப்பட்டது. சுமார் 2 ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட இப்பணி விரைவுபடுத்தப்பட்டது. ஆனால், ரோட்டை ஜல்லி போட்டு சமப்படுத்தியதுடன், கடந்த ஓராண்டுக்கு முன்பு திடீரென பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து மிகுந்த அப்பகுதியில், இரு வழிச்சாலை விரிவாக்க பணி பாதியில் நின்றுபோனதால், மேடு பள்ளமாகவும், பரவலாகவும் ஜல்லி போடப்பட்டு அவ்வழியாக செல்வோர் கடும் அவதிப்பட்டனர். ஏற்கனவே அமைக்கப்பட்ட கிழக்கு புறவழிச்சாலையை விரைந்து நிறைவு செய்ததுபோல், மேற்கு புறவழிச்சாலை பணியை மீண்டும் துவங்கி,  விரைந்து நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அதிமுக ஆட்சியில் பாதியில் கிடப்பில் போடப்பட்ட மேற்கு புறவழிச்சாலை பணி மீண்டும் துவங்கி துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அப்பணியை இன்னும் விரைவுபடுத்தாமல் இருந்தால், மேற்கு புறவழிச்சாலை பணி நிறைவடைய இன்னும் சில ஆண்டுகள் கடக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு புறவழிச்சாலை பணி நிறைவடைந்து வாகன போக்குவரத்து துவங்கினால், நகரில் போக்குவரத்து நெரிசல் மேலும் குறைய வாய்ப்பாக இருக்கும் என்பதால், அதற்கான நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து ஈடுபட வேண்டும் என பொள்ளாச்சி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.