நீட் மசோதா: குடியரசுத் தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்!

தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள நீட் மசோதாவை ஒன்றிய அரசிடமிருந்து தானே கோரிப் பெற்று, மசோதாவிற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு, சட்ட, கல்வி மற்றும் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட உயர் மட்ட குழு ஆராய்ந்து தந்த அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மசோதாவை சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக 2021 செப்டம்பர் மாதம் அனுப்பி உள்ளனர்.‌

உள்துறை, சுகாதாரத்துறை, ஆயுஷ் துறை, உயர் கல்வித் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் துறைகள் மாநிலச் சட்டப் பேரவையின் இறையாண்மைக்கு மதிப்பளிக்காமல் நடந்துக் கொள்வது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின்படி தனது அதிகார எல்லைக்கு உட்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டச் சட்டப் பேரவை, நிறைவேற்றி அனுப்பியச் சட்ட மசோதாவை, விளக்கம் கேட்கிறோம் என்ற பெயரில் முதலில் ஆளுநர், அவரைத் தொடர்ந்து ஒன்றிய அரசு ஒன்றரை ஆண்டு காலமாக முடக்கி வைத்திருப்பது சட்டப் பேரவை (Legislature) நிறைவேற்றும் மசோதாவை, செயலாட்சி (Executive), நினைத்தால் முடக்கி வைக்கலாம் என்ற நிலையை உருவாக்குகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு உருவாகும் அச்சுறுத்தலின் வெளிப்பாடாகவே ஆளுநர் மற்றும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டுச் சட்டப் பேரவை இரண்டு முறை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மசோதா, மாநில அரசுக் கல்லூரிகள் மற்றும் மாநில அரசின் இடங்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தனியார் நிர்வாக இடங்கள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கு இந்த மசோதா பொருந்தாது. கல்வி வணிகமயமாவதைத் தடுப்பதில், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துவதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை.

ஒன்றிய அரசின் பலதுறைகள் ஒவ்வொன்றாக விளக்கம் கேட்டு அனுப்பியக் கடிதங்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய வகையில் விளக்கங்களை தனது பதில் கடிதங்களில் தந்துள்ளது.

தமிழ்நாடு அரசு அனுப்பி உள்ள மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர வேண்டும் என்ற கோரிக்கையின் நியாயங்களை விளக்கி பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பு விரிவான கடித்தைக் குடியரசுத் தலைவருக்கு ஏற்கனவே அனுப்பி உள்ளது.

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகள் மசோதா குறித்து மீண்டும் மீண்டும் விளக்கம் கேட்டு ஒன்றன்பின் ஒன்றாக தமிழ்நாடு அரசிற்கு கடிதம் அனுப்பிக் கொண்டிருப்பது காலத்தைக் கடத்தி, மசோதாவின் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் சூழ்ச்சி. இத்தகையப் போக்கு மக்களாட்சி மாண்பிற்கு முற்றிலும் எதிரானது.

அடுத்தக் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கைகள் விரைவில் தொடங்க உள்ள சுழலில், தமிழ்நாடு சட்டப் பேரவை இரண்டு முறை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள “தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை சட்டம் 2021” மசோதாவை பிரதமர் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை மேலும் காலதாமதம் செய்யாமல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்கு உரிய பரிந்துரைகளுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காக்கின்ற பொறுப்பு குடியரசுத் தலைவருக்கு உள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள மசோதாவை ஒன்றிய அரசிடமிருந்து தானே கோரிப் பெற்று, மசோதாவிற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு மக்களின் பிரதிநிதியாக, நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர் என்ற‌ அடிப்படையில் கடிதம் அனுப்பியுள்ளேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.