27ம் தேதி கும்பாபிஷேகம் பழநி பஸ் நிலையத்திலிருந்து கோயிலுக்கு இலவச பஸ்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

பழநி: கும்பாபிஷேகத்தையொட்டி பழநி பஸ் நிலையத்திலிருந்து கோயிலுக்கு இலவச பஸ் இயக்குவதென முடிவு செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று பழநியாண்டவர் மகளிர் கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை வகித்தார். இதில் மாவட்ட கலெக்டர் விசாகன், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கும்பாபிஷேகத்தின்போது போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பழநி நகரின் புறநகர் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதென்றும், பக்தர்களை கோயிலுக்கு அழைத்து வர அங்கிருந்து இலவசமாக பஸ்களை இயக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது, கும்பாபிஷேக தீர்த்தங்களை எத்தனை இடங்களில் பக்தர்கள் மீது தெளிப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே தினமும் சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடந்து வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.