தமிழகத்தில் பாஜக ஆட்சி; பகல் கனவில் மிதக்கும் அண்ணாமலை – முத்தரசன் அறிவுரை

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு அதிமுக உடந்தையாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திமுகவின் உட்கட்சி பூசல் பாஜகவுக்கு சாதகமாகும் என்றும் பின்னாளில் அதிமுகவை பாஜகவே அழித்துவிடும் என்றும் ஊகிக்கப்படுகிறது. இதற்கு மத்தியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்த்லில் அதிமுகவை கெஞ்ச விட்டுவருகிறது பாஜக.

இதுகுறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அரசியல் களத்தில் அதிமுக என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை பாஜக தான் தீர்மானிக்க வேண்டுமென்கிற அவலம் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்த நிலைமைக்காகவா கட்சியைப் பாதுகாத்தனர்? என்று ஆதங்கமாக கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்தால் இந்து சமய அறநிலையத்துறையை நீக்கவதற்குத் தான் முதல் கையெழுத்து என பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ” தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு நூறு ஆண்டுகள் தாண்டிய வரலாறு இருக்கிறது. கடவுள்கள் பெயரிலும், சாஸ்திரங்கள் வழியிலும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த சிறு கும்பலின் பிடியில் இருந்த ஆலயங்களையும், அதன் சொத்துக்களையும் மீட்பதற்கு நீதிக்கட்சி ஆட்சி காலத்தில், இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்ட வரலாற்றை அண்ணாமலை கற்றுணர வேண்டும். கோயில் மனைகளில் குடியிருந்து வருபவர்களும், கோயில் நிலங்களை உழுது வரும் குத்தகை விவசாயிகளும்தான் கோயில் சொத்துக்களை சேதாரம் இல்லாமல் பாதுகாத்து வருகின்றனர்.

கோயில் நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள மத அடிப்படைவாதிகளும், சனாதான சக்திகளும் கடவுள் சிலைகளை கடத்துவது, நகை, பணம் போன்றவைகளில் கையாடல் செய்வது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள கோயில் சொத்துக்களை திமுக அரசு மீட்டு வரும் செய்தியால், ஆத்திரமடைந்த சுயநல சக்திகளின் உணர்வுகளை அண்ணாமலை பிரதிபலித்து, பகல் கனவு காண்கிறார். அவரது எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது.

தலைமுறை, தலைமுறையாக கோயில்மனைகளில் குடியிருந்து வருபவர்கள் மற்றும் கோயில் நில குத்தகை விவசாயிகள், நில உரிமையை உறுதி செய்ய வேண்டும் எனப் போராடி வரும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறையை நீக்க வேண்டும் என்பது திசைதிருப்பும் உள்நோக்கம் கொண்ட வஞ்சகக் குரல் என்பது இயல்பான ஆன்மீகவாதிகளுக்கு எளிதில் புரியும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது” என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.