பத்து ரூபாய் பணக் கட்டால் நின்று போன திருமணம்..!!

உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில் முகமதாபாத் கொத்வாலி பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற முடிவானது. இதில் துர்காப்பூர் கிராமத்தில் வசிக்கும் மணமகளுக்கும், பபீனா சாரா கிராமத்தில் வசிக்கும் மணமகனுக்கும் இடையே 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் பேசி, நிச்சயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் மதிய உணவு முடிந்து, இரு வீட்டாரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

இதன்பின்பு, மாலையில் திருமண ஊர்வலம் நடந்தது. அதனையடுத்து, நள்ளிரவில் திருமண சடங்குகளும் நடந்தன. அப்போது, மணமகளின் சகோதரருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துள்ளது. மணமகன் என்ன படித்து இருக்கிறார் என தெரிந்து கொள்ள நினைத்து உள்ளார். அதனால், திருமண நிகழ்ச்சியை நடத்திய புரோகிதரிடம் ரூ.10 நோட்டுகளையும் மற்றும் நாணயங்களையும் கொடுத்து உள்ளார்.

அவற்றை மணமகனிடம் கொடுத்து எண்ணும்படி கூறுங்கள் என்று மணமகளின் சகோதரர் கேட்டு கொண்டார். புரோகிதரும் அதேபோன்று செய்துள்ளார். அவற்றை வாங்கிய மணமகன் சரிவர எண்ண முடியாமல் திணறியுள்ளார். இதனை பார்த்து மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் திகைத்து போயுள்ளனர். இதனால், அதிகம் அதிர்ச்சியடைந்த மணமகள், படிப்பறிவு இல்லாத ஒரு நபரை திருமணம் செய்ய முடியாது என கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார்.

தகவல் பரவியதும் மணமகன் குடும்பத்தினர் போலீசிடம் தெரிவித்து உள்ளனர். காவல் ஆய்வாளர் கம்தா பிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று, இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பல மணிநேரம் ஒன்றாக ஆலோசனை நடந்தது. ஆனால், அதில் பலனில்லை. இறுதியாக திருமணம் ரத்து என முடிவானது.

படிக்காத நபருக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று மணமகளின் தாயாரும் மறுப்பு தெரிவித்து விட்டார். மணமகனின் பின்னணியை மறைத்து விட்டனர் என்றும் மணமகள் குடும்பத்தினர் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.