பழநி மலைக்கோயிலில் ரூ.75 லட்சத்தில் புதிய வின்ச்: ஒரே நேரத்தில் 72 பேர் பயணிக்கலாம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கு வசதியாக தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்கார், மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச்கள் இயக்கப்படுகின்றன. இதில் முதலாவது வின்ச் 36 பேர், 2வது வின்ச் 32 பேர், 3வது வின்ச் 36 பேர் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. பயண தூரம் 290 மீட்டர். பயண நேரம் 8 நிமிடங்கள். குறைந்த அளவிலான பக்தர்களை மட்டுமே ஏற்றி செல்ல முடிவதால் வின்ச்சில் பயணிக்க பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.

இதையடுத்து, பழநி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் சார்பில் நேற்று புதிதாக வடிவமைக்கப்பட்ட அதிக நபர்கள் பயணிக்கும் வகையிலான வின்ச் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த புதிய வின்ச்சில்  ஒரே நேரத்தில் 72 பேர்  பயணிக்கலாம்.  தைப்பூச திருவிழாவிற்கு பிறகு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* மூலவர் தரிசனம் ரத்து
மலைக்கோயிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், மூலவருக்கு நேற்று முதல் மருந்து சாற்றுதல் போன்ற கருவறை பணிகள் துவங்கின. இதன் காரணமாக நேற்று மாலையுடன் மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாத பையில் தீர்த்தம், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம், லேமினேஷன் செய்யப்பட்ட முருகன் படம் ஆகியவற்றை உள்ளீடு செய்யும் பணி நேற்று துவங்கியது. 200க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.