ராயபுரத்தில் மூனு மாடி சர்ப்ரைஸ்; ஜில்லுனு மாறப் போகும் சூழல்- சென்னை மாநகராட்சி அசத்தல்!

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் நெருக்கடியும், வாகன நெரிசலும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் நகரின் வெப்பநிலையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது. எனவே பொது இடங்களில் பூங்காக்கள், தோட்டங்கள் என பசுமை நிறைந்த பகுதிகள் ஏற்படுத்தப்படுவது அவசியம். ஏனெனில் இந்த செடிகள் சுற்றுப்புற பகுதியில் உள்ள வெப்பநிலை உள்வாங்கி சற்றே குளிர்ச்சியை அளிக்கும்.

சென்னை மாநகராட்சி திட்டம்

குறிப்பாக சூரிய ஒளியை உட்கிரகித்து ஜில்லென்ற சூழலுக்கு உதவும். இதையொட்டி சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகரில் உள்ள ராயபுரம் பகுதியில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில் பழைய ஜெயில் ரோட்டில் மூன்று மாடிகள் கொண்ட தோட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

என்னென்ன வசதிகள்?

மொத்தம் 6,865 சதுர மீட்டரில் பரந்து விரிந்த பசுமை பரப்பு அமையவுள்ளது. இதில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வழித்தடங்கள், குழந்தைகள் விளையாடும் பகுதி, இருக்கை வசதிகள், எல்.இ.டி விளக்கு வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை நிறைந்ததாக இருக்கும். வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் முழுமை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

மூன்று மாடி தோட்டம்

இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் 2.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சாய்வான நடைபாதை கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. ஒருபுறம் ஏறி மறுபுறம் இறங்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு பொதுமக்கள் நடைபாதை அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாடி தோட்டத்திலும் ஏராளமான செடிகள் வைக்கப்படும்.

விதவிதமான தாவரங்கள்

பல வண்ணங்களிலும் வெவ்வேறு விதமான தாவரங்கள் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கும் வகையில் இடம்பெறவுள்ளன. கூடவே புல் தரையும், அற்புதமான வடிவமைப்பில் தரை தளமும் அமைக்கப்படுகிறது. வட சென்னையை பொறுத்தவரை கான்கிரீட் கட்டுமானங்கள் தான் பெரும்பாலும் காணப்படுகின்றன.

மண்ணடி அருகில் தோட்டம்

இதிலிருந்து வித்தியாசப்படும் வகையில் மாடித் தோட்டங்கள் அமைக்கப்படுகின்றன. மண்ணடி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் பசுமை நிறைந்த பகுதியாக அமைவது சுற்றுப்புற குடியிருப்புவாசிகளுக்கு மிகவும் இனிமையான அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக செங்குத்து தோட்டம்

இதையடுத்து மின்ட் பேருந்து நிலையத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் மற்றொரு பசுமை பரப்பை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் யோகா செய்யும் பகுதி, கழிவறைகள், தோட்டங்கள் உள்ளிட்டவை வரவுள்ளன. அடுக்குமாடி தோட்டங்களை போலவே கட்டிடங்களின் மீது செங்குத்தான நிலையிலும் பசுமை பரப்பை உருவாக்கலாம் என்று சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.