இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரருமான கே.எல்.ராகுலும், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் இன்று திருமணம் செய்துகொள்ளப் போகிறார். இவர்கள் இருவரும் இன்று அதியாவின் நடிகரும் தந்தையுமான சுனில் ஷெட்டியின் கண்டாலா பண்ணை வீட்டில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இந்த திருமணத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்களும் பங்கேற்க உள்ளார்கள்.
யார் அதியா ஷெட்டி
கே.எல்.ராகுலின் மனைவியாகப் போகும் அதியா ஷெட்டி, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சுனில் ஷெட்டி. இவர் பல்வேறு படங்களில் மிரட்டி வில்லனாக நடித்துள்ளார். தமிழிலும் ஷியாம் உடன் 12பி, ரஜினியின் தர்பார் போன்ற படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.
தந்தையைப் போல் இவரும் புகழ் உச்சத்தை தொட கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஹீரோ என்கிற இந்தி படம் மூலம் பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் நடிகை அதியா ஷெட்டி. இவருக்கு முதல் படத்திலேயே ஏராளமான விருதுகளும் கிடைத்தது, இதையடுத்து 2 படங்களில் மட்டும் நடித்த அதியா ஷெட்டி, கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை.
அதியா ஷெட்டி – கே.எல்.ராகு காதல் கதை
கே.எல்.ராகுலும், அதியா ஷெட்டியும் நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமாகினார்கள். மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக விளம்பரங்களில் நடித்தபோது நட்பு ஏற்பட்டு பிறகு காதலர்களானார்கள். பின்னர் இருவரும் வெளிநாடுகளுக்கு ஒன்றாக பயணிக்க ஆரம்பித்தனர். இதனிடையே இதுகுறித்து இருவரும் வீட்டில் பேசி சம்மதம் வாங்கிய பின்னர் தற்போது திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இன்று மாலை 4 மணிக்கு இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
கே.எல்.ராகுல் மற்றும் அதியாவின் மெஹந்தி விழாக்கள் பண்ணை இல்ல வளாகத்தில் நேற்று நடைபெற்றிருக்கிறது. விழாக்களுக்குத் தயாராக இருக்கும் இடத்தைச் சுற்றி மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் இன்று நடைபெறுகிறது. மேலும் இந்த திருமணத்தில் தென்னிந்திய முறைப்படி வாழை இலையில் சாப்பாடு வழங்கப்படும் என்று சுனில் ஷெட்டி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.