புதுச்சேரி: புதுச்சேரி அரசு நிர்வாகத்திற்கு முதுகெலும்பாகதிகழும் வணிக வரித் துறையில் ஏராளமானகாலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, வரிவசூலில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்திற்கு வருவாய் ஈட்டி தரும் அரசு துறைகளில் வணிக வரித் துறைக்கு எப்போதும் முதலிடம் உண்டு. கடந்த 2021-22ம் ஆண்டு 3,300 கோடி ரூபாயை அரசுக்கு, வணிக வரித் துறை ஈட்டி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த வணிக வரித் துறையில் நிறைய பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இது, வரி வசூலுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துறையில், வணிக வரி அதிகாரிகள் பணியிடம் மொத்தம் 12 உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. அடுத்த நிலையில் உள்ள துணை வணிக வரி அதிகாரி பதவி மொத்தம் 14 உள்ளன. இதிலும் 6 பதவிகள் காலியாக உள்ளன.
மொத்தமுள்ள 24 உதவி வணிக வரி அதிகாரிகள் பணியிடத்தில் 5 காலியாக உள்ளன. இதேபோல், வணிக வரித் துறையில் 3 உதவி ஆணையர் பதவிகள் உள்ளது. இதிலும் ஒன்று காலியாக உள்ளது. ஒட்டு மொத்தமாக 18 அதிகாரிகள் பதவிகள் வணிக வரித் துறையில் காலியாக உள்ளது.
இதை தவிர, அமைச்சக ஊழியர்கள் பணியிடங்களும் ஏராளமாக காலியாக உள்ளன. இதனால், அரசுக்கு வருவாய் பாதிக்கப்படுவதுடன், வியாபாரிகளும் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, வணிக வரித் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த பிரிவில் இருந்த வணிக வரி அதிகாரி கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இந்த காலியிடம் இரண்டு மாதங்கள் கடந்தும் நிரப்பப்படவில்லை. இதனால், கட்டிய வரிக்கான ரீபண்ட்டினை திரும்ப பெற முடியாமல் வியாபாரிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
மாநில பட்ஜெட்டில் 40 சதவீத தொகையை வணிக வரித் துறை மூலமாக தான் கிடைக்கிறது. அதிகாரிகள்தான் வரியை வசூலித்து அரசுக்கு கொடுக்கின்றனர்.
இதில் நிறைய பதவிகள் காலியாக உள்ளதால் துறையின் ஒட்டுமொத்த வரி வசூலும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதும், பல பதவிகள் காலியாக உள்ள சூழ்நிலையிலும் நிர்ணயிக்கப்பட்ட வணிக வரி இலக்குகளை காட்டிலும் கூடுதலாகவே வசூலித்து கொடுத்து வணிக வரித் துறை அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

இது, பாராட்டுக்குரியது என்றாலும், போதிய பணியாளர்கள் இல்லாமல் எவ்வளவு காலம் தான் வணிக வரித் துறை தாக்குப்பிடிக்கும் என்று வியாபாரிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே, நிதி நெருக்கடியில் புதுச்சேரி அரசு தள்ளாடி வரும் சூழ்நிலையில் போதிய அதிகாரிகள் இல்லாமல் வணிக வரித் துறை தள்ளாடினால், அது மாநில அரசின் கஜானாவுக்கு தான் சிக்கலை ஏற்படுத்தும்.
மேலும், வியாபாரிகளுக்கான சேவையிலும் குறைபாட்டை ஏற்படுத்தி விடும். எனவே, அரசு நிர்வாகத்திற்கு முதுகெலும்பாக உள்ள வணிக வரித் துறையின் அனைத்து காலியிடங்களை விரைவாக நிரப்ப கவர்னர், முதல்வர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் பணி சுமை
புதுச்சேரியில், மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் மாநில ஜி.எஸ்.டி., மூலம் வரி வசூல் செய்யப்படுகிறது. மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தின் கீழ் புதுச்சேரியில் 9,400 வர்த்தகர்கள் இணைந்து உள்ளனர். இவர்களின் வரி வசூலை 170 அதிகாரிகள் கண்காணித்து மத்திய அரசுக்கு வசூலித்து கொடுக்கின்றனர்.
ஆனால், மாநில ஜி.எஸ்.டி., அலுவலகத்தின் கீழ் (வணிக வரித் துறை) 15,200க்கும் மேற்பட்ட வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ள சூழ்நிலையில் வெறும் 53 வணிக வரித் துறை அதிகாரிகளே பணியில் உள்ளனர். இது, தற்போது பணியில் உள்ள வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்