உணவு இலவசம், சுவாசிக்க காற்றுக்கு ரூ.2500… தாய்லாந்தின் நிலைமை என்ன?

தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை வந்து விட்டது, அடுத்தது காற்றையும் காசு கொடுத்து வாங்கும் சூழல் உருவாகும் என்று சூழலியல் ஆர்வலர்கள் பலர் நம்மை எச்சரித்தனர். இந்நிலையில் தான், தூய்மையான காற்றை சுவாசிக்க விலை நிர்ணயம் செய்துள்ளார் தாய்லாந்து நாட்டை சேர்ந்த விவசாயி டுசிட் கசாய்.

air pollution in Bangkok, Thailand.

தாய்லாந்து நாட்டில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவது, மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தாய்லாந்தில், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களால் வெளிவரும் நச்சுப் புகைகள் மற்றும் விவசாய கழிவுகளை எரிப்பதன் மூலம் வெளியாகும் புகைகளால் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. காற்று மாசு, தாய்லாந்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அந்நாட்டில் அதிகமான மக்கள் சுவாசிக்க தூய்மையான காற்றைத் தேடி அலைகின்றனர்.

இந்நிலையில், தாய்லாந்தில் விவசாயம் செய்துவரும் 52 வயது நிரம்பிய டுவிட் கசாய், தனது பண்ணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தூய்மையான காற்றை சுவாசிக்க,  இந்திய மதிப்பில் 2500 ரூபாய் கட்டணமாக வசூலித்து வருவது, நம்மை வியப்பூட்டும் விதமாக உள்ளது. அங்கு வருபவர்களுக்கு, உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், முதல் ஒரு மணி நேரத்திற்கு சுத்தமான காற்றை சுவாசிக்க 2500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

air pollution in Bangkok, Thailand.

இது தொடர்பாக தாய்லாந்தின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த டுசிட் கசாய், “என்னைப் பொறுத்தவரை, என் பண்ணையில் தூய்மையான காற்று கிடைக்கும். மாசு இல்லாத, தூய்மையான காற்றை சுவாசிக்க விரும்புவோருக்கு இந்த இடம் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எனது பண்ணைக்கு அதிக அளவில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வருகை தருகின்றனர். அவர்களிடம் நான் கட்டணம் வசூலிப்பதில்லை. இயற்கையை சிதைப்பவர்கள், இங்கே வருகை தர வேண்டாம் என்பதே எனது கோரிக்கை” என்று கூறியுள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்க குழு ஒன்றையும் தொடங்கியுள்ளார் டுசிட் கசாய்.

சுமார் 8 கோடி பேர் வாழும் நாடான தாய்லாந்திற்கே இந்த நிலை என்றால், இந்தியாவின் நிலைமையை சிந்திக்க வேண்டும். உலகின் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக விளங்கும் இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அதிகம் உள்ளன. தூய்மையான காற்றின் அவசியத்தை உணர்ந்து அரசும், மக்களும் செயல்பட வேண்டும்‌ என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.