காங்கிரஸ்: “சீட் கேட்டு அழவில்லை; ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றிக்காக பாடுபடுவேன்" – மக்கள் ராஜன்

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கட்சியின் மேல்மட்ட தலைவர்களைச் சந்தித்து கடந்த 1 வாரத்துக்கும் மேலாக சென்னையில் முகாமிட்டிருந்தவர் ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ஜி.ராஜன்.

“கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். இளைஞரான எனக்குதான் இந்த முறை போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்” எனக் கூறி ஊடகத்தினர் மத்தியில் கண்கலங்கி பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் மக்கள் ராஜனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை காங்கிரஸ் வேட்பாளராக கட்சி மேலிடம் அறிவித்து விட்டது.

மக்கள் ராஜன்

மக்கள் ராஜன், சீட் கிடைக்காத விரக்தியில் உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார், “ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைந்த வடு மறைவதற்கு முன்பே இத்தொகுதியில் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்தத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டதால் இதே தொகுதியை காங்கிரஸுக்கு வழங்குமாறு எங்கள் தலைவர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டு பெற்றார். அதன் அடிப்படையில் இத்தொகுதியில் போட்டியிட காங்கிரஸுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது.

காங்கிரஸ் ஜனநாயக அடிப்படையில் இயங்கக் கூடிய கட்சி என்பதால் இத்தொகுதியில் போட்டியிட நானும் வாய்ப்பு கேட்டேன். சென்னை சத்தியமூர்த்தி பவனில் எங்களது அகில இந்திய பொதுச் செயலாளரை சந்தித்து எனக்கு வாய்ப்பளிக்குமாறு வற்புறுத்தி கேட்டுக் கொண்டேன். எனது கோரிக்கையையும் பரிசீலிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்து விட்டது. எனக்கு சீட் கிடைக்காதது சற்று வருத்தமளிப்பதாக இருந்தாலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகச் சிறந்த தலைவர். ஆளுமை கொண்ட அவரை வேட்பாளராக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அவரின் வெற்றிக்காக நான் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன். அதற்காக செவ்வாய்க்கிழமை முதல் வீடு, வீடாகச் சென்று காங்கிரஸுக்கு வாக்குகளைச் சேகரிப்பேன்.  

மக்கள் ராஜன்

இதுதொடர்பாக சென்னையில் இருந்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவரின் வெற்றிக்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்து விட்டேன்.
கடந்த தேர்தலில் திருமகன் ஈவெரா பெற்றதை விட சிறப்பான வெற்றியை பெற நானும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தொண்டர்களும் பாடுபடுவோம். காங்கிரஸின் வெற்றிக்கு எந்தவிதமான களங்கமும் ஏற்படாத வகையில் நான் செயல்படுவேன்.

இதைபற்றி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசும்போது, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஈரோட்டில் போதிய ஆதரவில்லை என்றும், ஈரோட்டிலுள்ள மாவட்டத் தலைவர் ஒருவரே அவரை ஆதரிக்கவில்லை என்றும், அந்த மாவட்டத் தலைவர் மனவருத்தத்தில் இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.
அண்ணாமலை இப்படித்தான் அரைவேக்காட்டுத்தனமாகவே எதையும் புரிந்து கொள்வார்.

காங்கிரஸ் ஒரு ஜனநாயக இயக்கம். இக்கட்சி சார்பில் போட்டியிட இளைஞர் என்ற வகையில்  நானும் வாய்ப்பு கேட்டேன். அதற்கான முழு முயற்சியையும் மேற்கொண்டேன். தற்போது சீட் கிடைக்காவிட்டாலும், இளங்கோவனின் வெற்றிக்காக நானும், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸாரும் முழு மூச்சாக பாடுபடுவோம் என்பதை அண்ணாமலைக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் என்றும் காங்கிரஸுக்கு துரோகம் செய்ய மாட்டோம். எனவே, இந்தத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றிக்காக பாடுபடுவோம்” என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பி்ல்
மக்கள் ராஜன்

அப்போது, சென்னை பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில், `இந்தக் கட்சிக்காக நான் எவ்வளவோ உழைத்திருக்கிறேன். எனக்கு கட்டாயம் சீட் வழங்க வேண்டும்’ என்று கண்ணீர் விட்டு அழுதீர்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மக்கள் ராஜன், “எனக்கு தாய், தந்தை இல்லாத நிலையிலும், கட்சியைத் தான் தாய், தந்தையாக நினைக்கிறேன் என்று கூறி தான் அழுதேனே தவிர, சீட் கேட்டு அழவில்லை. காங்கிரஸ் கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தேன். எனக்கு கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டபோது கிடைக்கவில்லை. அதேசமயம் ஈரோடு கிழக்கில் நான் சார்ந்த காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதால் அதன் வெற்றிக்காக பாடுபடுவேன்.

பா.ஜ.க.வை பொறுத்தவரை அண்ணாமலை ஒரு மாஸ்க் அணிந்துள்ளார். அதன் பின்னால் ஆர்.எஸ்.எஸ். உள்ளது. அ.தி.மு.க.வும் ஒரு மாஸ்க் அணிந்துள்ளது. அதன் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது. இந்த முகக் கவசத்தை கழற்றி விட்டு களத்துக்கு வாருங்கள். கட்டாயம் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் பிரமாண்டமான வெற்றியை பெறும். கிழக்கு தான் எங்கள் இலக்கு” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.